தேசிய அரும்பொருளகங்களில் பார்வையாளர்கள் அதிகரிப்பு

தேசிய அரும்பொருளகங்களில் பார்வையாளர்கள் அதிகரிப்பு

1 mins read
ad6a0cd8-7a8e-4f26-93e8-eacff0109bf4
2015ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தேசிய கலைக்கூடம் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இலவச அனுமதி வழங்குகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் வருகையாளர் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

2019ஆம் ஆண்டு தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் 5.7 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் சென்றனர்.

ஒப்புநோக்க, 2012ல் அந்த எண்ணிக்கை 2.8 மில்லியனாகப் பதிவானது. வருடாந்தர சிங்கப்பூர் கலாசாரப் புள்ளிவிவர அறிக்கைகளில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தேசிய மரபுடைமைக் கழக அரும்பொருளகங்களில் 2012ஆம் ஆண்டு பார்வையாளர் எண்ணிக்கை இரண்டு மில்லியனாகவும் 2019ல் மூன்று மில்லியனாகவும் பதிவானது.

கழகம், மொத்தம் ஒன்பது அரும்பொருளகங்களையும் மரபுடைமை நிலையங்களையும் நடத்திவருகிறது.

நாட்டின் ஆகப் பழைமையான அரும்பொருளகமான சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், ஆசிய கலாசார அரும்பொருளகம் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் பின்னர் அது வலுவாக மீட்சிகண்டுள்ளது.

கழகத்தின்கீழ் செயல்படாத அரும்பொருளகமான தேசிய கலைக்கூடம், 2015ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்தே, சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இலவச அனுமதி வழங்குகிறது.

2022ல் ஏறக்குறைய 1.5 மில்லியன் பார்வையாளர்கள் அங்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை இருமடங்கு.

2013ஆம் ஆண்டு மே மாதம் முதல், சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அரும்பொருளகங்களில் இலவச அனுமதி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. பத்தாண்டுகளில் அரும்பொருளகங்களில் பார்வையாளர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது அரசாங்கத்தின் முடிவு சரியே என்பதைக் காட்டுவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்