சப்பாத்தி, சட்னியில் கரப்பான்பூச்சி: உணவு நிறுவனம் மீது குற்றச்சாட்டு

சப்பாத்தி, சட்னியில் கரப்பான்பூச்சி: உணவு நிறுவனம் மீது குற்றச்சாட்டு

2 mins read
1a076d38-15ee-433e-aee3-f2c0d34182a6
அல்ஜுனிட் அவென்யூ 4ல் உள்ள ‘சுவை ஃபுட்ஸ்’ உணவு நிறுவன வளாகத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி தூய்மைக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. - படம்: கூகல் மேப்ஸ்

அல்ஜுனிட்டில் உள்ள இந்திய உணவு நிறுவன வளாகத்தில் சட்னி பொட்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இடத்திலும் உயிருள்ள கரப்பான் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 27ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உணவு விற்பனைச் சட்டத்தின் கீழ் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டது.

அல்ஜுனிட் அவென்யூ 4ல் அமைந்துள்ளது ‘சுவை ஃபுட்ஸ்’ உணவு விநியோக நிறுவனம். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அந்த நிறுவன வளாகத்தில் பல்வேறு தூய்மைக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

வளாகத்தை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் அதன் தூய்மையை உறுதிசெய்யத் தவறியதாகவும் ‘சுவை ஃபுட்ஸ்’ நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவை தேங்காய் சட்னிப் பொட்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இடத்திலும் உணவு பதப்படுத்தும் இயந்திரத்தின் மேலும் உயிருள்ள கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.

நிறுவனத்தின் உணவு விநியோக வண்டியின் பின்பகுதியிலும் அவை காணப்பட்டதாகவும் நிறுவன வளாகம் கறைபடிந்து, தரை பெயர்ந்திருந்ததாகவும் சொல்லப்பட்டது.

அதன் அலுவலக அறை சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டு பொட்டலமிடும் பகுதியாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சுவை ஃபுட்ஸ்’ நிறுவனம், சைவ, ஹலால் உணவுப் பொருள்களை விற்பனை செய்வதாக அதன் இணையத்தளம் கூறுகிறது.

தென்கிழக்காசியாவில் பதப்படுத்தும் வேதிப்பொருள்கள் கலக்காமல் மாவு தயாரிக்கும் ஒரே நிறுவனம் என்றும் தங்கள் தயாரிப்புக்கு தனிச்சுவை இருப்பதாகவும் ‘சுவை ஃபுட்ஸ்’ அதன் விளம்பரத்தில் குறிப்பிடுகிறது.

இவ்வழக்கு விசாரணை மீண்டும் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்திற்கு $5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்