தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூன் லே பேருந்து விபத்தில் நால்வர் காயம், ஓட்டுநர் கைது

2 mins read
30b06431-7fac-43f3-b282-908aada4b80d
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பேருந்துச் சேவை 178உடன் எஸ்பிஎஸ் பேருந்துச் சேவை 199 மோதியது. - படம்: ஷின் மின் நாளேடு வாசகர்

பூன் லே பேருந்து முனையத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் காயமடைந்த நான்கு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

பேருந்து ஓட்டுநர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவை 178உடன் எஸ்பிஎஸ் பேருந்துச் சேவை 199 மோதியது.

61 ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 3ல் நடந்த சம்பவம் குறித்து டிசம்பர் 29ஆம் தேதி இரவு 9.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சம்பவத்தில் காயமடைந்த நான்கு பெண்களும் 40 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

கவனக்குறைவால் காயம் ஏற்படுத்தியதற்காக 56 வயதுப் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்ததாகக் காவல்துறை கூறியது.

இரவு 8.55 மணியளவில் பேருந்துச் சேவை 178, முனையத்திலிருந்து மெதுவாக நகரத் தொடங்கியபோது விபத்து நிகழ்ந்ததாக எஸ்எம்ஆர்டி கூறியது.

காயமடைந்த நான்கு பெண்களைத் தவிர மற்ற பயணிகள் வேறொரு பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அது சொன்னது.

பேருந்துச் சேவை 178ல் கிட்டத்தட்ட 20 பயணிகள் இருந்ததாகவும் பேருந்துச் சேவை 199ல் பயணிகள் யாருமில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியதாக ஷின் மின் நாளேடு சனிக்கிழமை (டிச.30) தெரிவித்தது.

காயமடைந்த அனைவரும் உடல்நலம் தேறவேண்டும் என்பதே இப்போதைய கவலை என்று கூறிய எஸ்எம்ஆர்டி, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் வழங்க அவர்களைத் தொடர்பு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது.

விபத்து குறித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நிறுவனம், விசாரணையில் காவல்துறைக்கு உதவி வருவதாகக் குறிப்பிட்டது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்