தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023ல் 4,000 தாதியர் பணியமர்த்தப்பட்டனர்

2 mins read
9dd9a5b2-4b99-48db-b828-b9191d35b697
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு, 2023ஆம் ஆண்டு புதிதாக கிட்டத்தட்ட 4,000 தாதியரைப் பணியமர்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவலின்போது சிங்கப்பூரை விட்டு வெளியேறியோர், தாதிமைத் தொழிலிலிருந்து விலகியோர் போன்றோரால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதும் அதிகரித்துவரும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை ஈடுகட்ட உதவுவதும் இதன் நோக்கங்கள்.

சுகாதார அமைச்சு 2023ல் புதிதாக 4,000 தாதியரையும் 2022ல் 3,400 தாதியரையும் வேலையில் சேர்த்ததாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

2023ன் முற்பாதியில் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலிருந்தும் நடத்திய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் கிட்டத்தட்ட 2,000 தாதியர் பணியமர்த்தப்பட்டனர். ஆண்டின் பிற்பாதியில் மேலும் 2,000 தாதியரை வேலைக்கு எடுக்கவிருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது.

கிருமிப் பரவலுக்குப் பிறகு நாடுகளின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, 2021, 2022ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் பணிபுரிந்த வெளிநாட்டுத் தாதியர் பலர் தாயகம் திரும்பினர். உலக அளவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையினர்க்கான போட்டித்தன்மை தீவிரமடைந்தது.

சிங்கப்பூரில் வேலை பார்த்த வெளிநாட்டுத் தாதியர் பெரும்பாலும் பிலிப்பீன்ஸ், மலேசியா, மியன்மார் உள்ளிட்ட வட்டார நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

2022ஆம் ஆண்டு அந்த நாடுகளிலிருந்து இங்கு வந்து வேலைபார்த்த தாதியரின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிடக் குறைந்ததை சிங்கப்பூர் தாதியர் வாரியப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அந்த ஆண்டு இங்கு பணியிலிருந்த, பதிவுசெய்யப்பட்ட தாதியரில் 75 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். மற்றவர்கள் பிலிப்பீன்ஸ், மலேசியா, மியன்மார், இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

தொடர்புடைய செய்திகள்

ஓர் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இங்கு வரும் தாதியரின் எண்ணிக்கை, வெளியே செல்வோரைவிடத் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

வெளிநாட்டுத் தாதியரை அதிக எண்ணிக்கையில் பணியமர்த்த அமைச்சு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றாரவர்.

2022ஆம் ஆண்டு கூடுதலான வெளிநாட்டுத் தாதியர்க்கு நிரந்தரவாசத் தகுதி வழங்கப்பட்டிருப்பதாக சென்ற ஜூலை மாதம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

கிருமிப் பரவலை எதிர்த்த போராட்டத்தில் அவர்களது பங்களிப்பை அங்கீகரிப்பதும் சிங்கப்பூரின் அதிகரிக்கும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை ஈடுகட்டுவதும் அதற்கான காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்