தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசதி குறைந்த 3,000 குடும்பங்களுக்கு ஜயன்ட் நன்கொடை

1 mins read
a7e225d4-6037-4bb2-8257-d5e25af34799
குடியிருப்பாளரான 78 வயது திருவாட்டி கெலப் ஆஞ்சலினா வயலட்டிடம் அரிசி, சமையல் எண்ணெய்யை விநியோகித்த சமுதாய, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரின் பரேட் வட்டாரத்தில் வசிக்கும் 3,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஜயன்ட் பேரங்காடி இவ்வாண்டு அரிசி மற்றும் சமையல் எண்ணெய்யை நன்கொடை வழங்குகிறது.

இத்திட்டத்தைத் தொடங்கிவைக்கும் வகையில் ஜனவரி 3ஆம் தேதியன்று சாய் சீ வட்டாரத்தில் ஓரறை வாடகை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அந்த அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஜயன்ட் பேரங்காடிகளை நடத்தும் டிஎஃப்ஐ சில்லறை வர்த்தகக் குழுமியம், அரசாங்கத்தின் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுத் திட்டத்துக்கும் ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரங்காடிகளிலும் உணவு அங்காடி நிலையங்களிலும் பொருள்கள், உணவுவகைகளை வாங்க இத்திட்டம் மூலம் $500 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஜயன்ட் பேரங்காடிகளில் $100 செலவு செய்வோருக்கு 2.5 கிலோ அரிசி மூட்டை இலவசமாகத் தரப்படும்.

அதுமட்டுமல்லாது, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 700 அத்தியாவசியப் பொருள்களுக்கான பொருள் சேவை வரியில் ஒரு விழுக்காட்டை டிஎஃப்ஐ ஏற்கும்.

ஜனவரி 3ஆம் தேதியன்று ஜயன்ட் நன்கொடை வழங்கிய அரிசி, சமையல் எண்ணெய்யை வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்க சமுதாய, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங் உதவினார்.

இத்தகைய திட்டம் வெறும் கடமைக்காக செயல்படுவதற்கானதல்ல என்று தெரிவித்த திரு டோங், அதை மனமார, புன்முறுவலுடன் செய்து சமூகப் பணியின் ஒரு பகுதியாக இருப்பதே இலக்கு என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்