எம்ஆர்டி கதவுகளைத் திறந்தவருக்கு மனநோய்

எம்ஆர்டி கதவுகளைத் திறந்தவருக்கு மனநோய்

2 mins read
7407e16e-e6f9-4d87-a302-b8f46ff661f8
ரயில் கதவுகளை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்ற வனேசா வாங் ஸி குயி. - படங்கள்: Raven Qiu / ஃபேஸ்புக்

இரண்டு வார காலத்தில் பெருவிரைவு ரயில்களின் (எம்ஆர்டி) கதவுகளைத் திறந்தவருக்கு இருமுனைக்கோடி மனநிலைப் பிரச்சினை உள்ளது என்றும் அந்தக் காலகட்டத்தில் அவருக்கு அந்நோயின் அறிகுறிகள் மீண்டும் தலைதூக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயில்களிலும் நிறுத்தப்பட்ட ரயில்களிலும் அவர் கதவுகளை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்ற காட்சிகள் பதிவான காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.

அச்செயல்களைப் புரிந்த 47 வயது வனேசா வாங் ஸி குயி, ஓர் ஆண் என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிய வந்தது. பொதுமக்களுக்குத் தொந்தரவு அளித்ததாக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள், வேண்டுமென்றே பிறருக்குக் காயம் விளைவித்ததாக சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை அவர் ஒப்புகொண்டார்.

பொதுமக்களுக்குத் தொந்தரவு அளித்ததாக சுமத்தப்பட்ட மேலும் ஒரு குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்படும். இம்மாதம் 17ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.

வாங்கிற்குக் கட்டாய மனநல சிகிச்சை உத்தரவு தேவையா என்பதை ஆராயும் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ கேட்டுக்கொண்டார். அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் இவோன் பூன், வாங்கின் வழக்கறிஞர் கலைதாசன் கருப்பையா இருவரும் அந்த அறிக்கைக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி அதைத் தயார்ப்படுத்துமாறு கூறினார்.

கட்டாய மனநல சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சிறைத் தண்டனைக்குப் பதிலாக வாங்கிற்கு மனநல சிகிச்சை வழங்கப்படும்.

வாங்கிற்கு பாலினம் தொடர்பான மனநலப் பிரச்சினையும் இருமுனைக்கோடி மனநிலை பிரச்சினையும் இருப்பது 2019ஆம் ஆண்டு தெரிய வந்தது என்றும் ஈராண்டுகளுக்கு அவர் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் பூன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்