சிங்கப்பூரில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

2 mins read
7e2ae850-2a7d-42a5-81f9-db94ac06cff5
2023 நவம்பர் மாதம் சில்லறை விற்பனை சூடுபிடித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சில்லறை விற்பனைகள் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 2.5 விழுக்காடு அதிகரித்தது.

அக்டோபர் மாதம் சில்லறை விற்பனை 0.1 விழுக்காடு குறைந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் அது மீண்டு வந்தது.

குறிப்பாக, உணவு மற்றும் மதுபானம், வாகனங்கள், கைக்கடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்தது.

மாத அடிப்படையில் சில்லறை விற்பனை நவம்பரில் 0.5 விழுக்காடு அதிகரித்தது. இதற்கு முந்தைய மாதத்தில் சில்லறை விற்பனை 0.9 விழுக்காடு குறைந்தது.

சிங்கப்பூர் புள்ளி விவரத்துறை (சிங்ஸ்டாட்) வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் தெரிய வந்தன.

நவம்பர் மாதம் இடம்பெற்ற சில்லறை விற்பனையின் மொத்த மதிப்பு 4.1 பில்லியன் வெள்ளி. அவற்றில் 15.2 விழுக்காடு விற்பனை இணையம்வழி இடம்பெற்றவை. அக்டோபர் மாதம் இந்த விகிதம் 13.1 விழுக்காடாகப் பதிவானது.

பொதுவாக ஆண்டிறுதியில் இணையம்வழிப் பொருள்களை வாங்க ஊக்குவிக்கும் ‘சிங்கல்ஸ் டே’, ‘பிளாக் ஃபிரைடே’ போன்ற நிகழ்வுகள் இடம்பெறும். இணையம்வழி இடம்பெற்ற சில்லறை விற்பனைகள் அதிகரித்ததற்கு அதுவே முக்கியக் காரணம் என்று சிங்ஸ்டாட் குறிப்பிட்டது.

கணினி, தொலைத்தொடர்புக் கருவிகள் மொத்த விற்பனையில் 52.5 விழுக்காடு சில்லறை விற்பனையாக இணையம்வழியாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அறைகலன், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் மொத்த விற்பனையில் 6.4 விழுக்காடும் பேரங்காடிகள், அதிபேரங்காடிகளின் மொத்த விற்பனையில் 13.5 விழுக்காடும் இணையம்வழி சில்லறை விற்பனையாக இடம்பெற்றன.

சில்லறை வர்த்தகத்தில் இடம்பெறும் துறைகளில் பாதிக்கு மேலானவற்றில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் நவம்பர் மாதம் விற்பனை அதிகரித்து. குறிப்பாக உணவு மற்றும் மதுபானத் துறை ஆக அதிகமாக 13.6 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

குறிப்புச் சொற்கள்