தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி தொடர்பில் ஓட்டப் பந்தய பயிற்றுநரிடம் காவல்துறை விசாரணை

2 mins read
c0bac571-397a-4a3d-bb40-b304d1f7144c
மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் லெக்சஸ் டான். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஒன்பது மாதங்களில் உள்ளூர் ஓட்டப் பந்தயப் பயிற்றுவிப்பாளரான லெக்சஸ் டான் மீது காவல்துறையில் குறைந்தது மூன்று புகார்கள் அளிக்கப்பட்டன.

ஓட்டப் பந்தயம் தொடர்பான தயாரிப்புகள், வர்த்தகம், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் தொடர்பில் மோசடிகள் இடம்பெற்றதாகப் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஃப்1 ரன்னர்ஸ், ஃபாஸ்ட்ஒன்ஸ் ஆகிய ஓட்டப் பந்தயக் குழுக்களை நிறுவியவர் டான். ஏமாற்றியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை டான் முன்னதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் டான், 100,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பெற தனக்குக்கீழ் பயிற்சிபெற்ற கிட்டத்தட்ட 40 ஓட்டப் பந்தய வீரர்களை ஏமாற்றினார்.

வெளிநாடுகளில் நெடுந்தொலைவோட்டப் பந்தயங்கள் நடப்பதாகக் கூறி அவர் போலி சுற்றுப்பயணத் தொகுப்புகளை விற்றார். அதோடு, நடப்பில் இல்லாத ‘கார்மின்’ கைக்கடிகாரங்களை விற்பதாகக் கூறி ஏமாற்றினார்.

51 வயது டான் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரிடம் ஏமாந்ததாகக் கூறப்படுவோர் 32,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்ததாக நம்பப்படுகிறது. இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் வியாழக்கிழமையன்று காவல்துறை உறுதிப்படுத்தியது.

ஆண்ட்ரூ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட 42 வயது ஆடவர், டானின் காலணி வர்த்தகத்தில் 20,000 வெள்ளி முதலீடு செய்து ஏமாந்ததாகக் கூறப்படுகிறது.

இயோ என்ற தனது குடும்பப் பெயரைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மற்றோர் ஆடவர், டான் ஏற்பாடு செய்த ஓர் ஓட்ட நிகழ்ச்சிக்காக 12,500 வெள்ளி முதலீடு செய்து மோசம் போனதாகச் சொல்லப்படுகிறது.

டான் ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படும் இங் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட 43 வயது மாது, டானிடமிருந்து காலணிகளை வாங்கியதாகவும் அவை வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தார்.

இங், டானின் ஓட்டப் பந்தயக் குழு ஒன்றில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தார். டானின் கடந்த காலத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்தபோதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்க விரும்பியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இங் கூறினார்.

இன்னொரு ஓட்டப் பந்தய வீரரான 36 வயது ஓ யூ சோங் என்பவரும், டானிடமிருந்து காலணிகளை வாங்கி ஏமாந்ததாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்