சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (எஸ்ஐடி) புதிதாக சுகாதாரம், பொறியியல் தொடர்பான கல்வித் திட்டங்களை இவ்வாண்டு அறிமுகப்படுத்துகிறது.
அடுத்த தலைமுறையினரை முக்கிய வேலைத் துறைகளுக்குத் தயாராக்குவது இதன் இலக்காகும்.
சுகாதாரக் கல்வித் திட்டத்தின்கீழ் புதிதாக தாதிமைத் துறையில் ஒருங்கிணைந்த இளநிலை, முதுநிலைப் பட்டக் கல்வி அறிமுகம் காண்கிறது. சிங்ஹெல்த் பொதுச் சுகாதாரக் குழுமத்துடன் இணைந்து இந்தப் பட்டக்கல்வி வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் அதிவேகமாக வளர்ந்து வரும் சுகாதாரச் சூழலுக்கு தாதியர்களையும் தாதிமை நிபுணர்களையும் பயிற்றுவிக்க இந்த பட்டக்கல்வி வழங்கப்படுகிறது.
மேலும், பொறியியல் கல்வித் திட்டத்தின்கீழ் வேளாண்-தொழில்நுட்ப, மீன்வளர்ப்புத் துறையில் நிபுணத்துவச் சான்றிதழுக்கான பாடத்திட்டத்தையும் எஸ்ஐடி அறிமுகம் செய்கிறது. வேளாண்-உணவுத் துறையில் பங்காற்ற விரும்புவோருக்கு இந்த நிபுணத்துவச் சான்றிதழ் பரிந்துரைக்கப்படுகிறது.
அத்துடன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக் கல்வித் திட்டத்தின்கீழ் நிபுணத்துவப் பணியாளர்கள், சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை அளவீடு, நிர்வாகம் எனும் துறையில் நிபுணத்துவச் சான்றிதழுக்கான கல்வியை மேற்கொள்ளலாம். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைத் துறையில் பணிபுரிவோர் தங்களது திறன்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 39 பட்டக் கல்விப் பாடத்திட்டங்களை வழங்கவுள்ளது. பட்டக்கல்விக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை பதிந்து கொள்ளலாம்.
கல்விக் கழகத்தின் பொது வரவேற்பு தினம், சிங்கப்பூர் சன்டெக் மாநாடு, கண்காட்சி நிலையத்தில் ஜனவரி 13, 14ஆம் தேதிகளில் நடைபெறும். இதில் எஸ்ஐடி வழங்கும் பல்வேறு பட்டக்கல்விகளைப் பற்றி அறியலாம்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பொது வரவேற்பு தினத்தைப் பற்றி மேல்விவரங்கள் அறிய https://www.singaporetech.edu.sg/openhouse/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.

