புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு மத்திய பொது நூலகம் மீண்டும் திறப்பு

விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள மத்திய பொது நூலகம், 18 மாத புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கடல்வாழ் பல்லுயிர்ச் சூழல் எனும் கருவில் சிறுவர்களுக்கான கற்றல் தளம் ஒன்று இதில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ‘ஏஆர்’ எனப்படும் மிகைமெய் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்திக் கதைசொல்லும் வசதியும் இந்த நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, ஜனவரி 12ஆம் தேதி, புதுப்பிப்பிக்கப்பட்ட மத்திய பொது நூலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அறிவுக் களஞ்சியங்களாகத் திகழும் நூலகங்கள் சமுதாயத்தில் சிறப்பு அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நூலகங்கள் காலப்போக்கில் மேம்பாடு கண்டு பல தலைமுறைகளுக்கு ஏற்றவகையில் அறிவுசார்ந்த, புதிய தகவல்களை வழங்கும் நிலையங்களாகத் திகழ முடியும்.

“மின்னிலக்கத் தளங்களும் அதிக எண்ணிக்கையிலான தகவல்களும் கோலோச்சும் இன்றைய உலகில், மக்களிடையே கற்றலையும் தொடர்பையும் மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை நூலகங்கள் கண்டறிய வேண்டும்,” என்று அமைச்சர் தமது உரையில் வலியுறுத்தினார்.

இதைக் கருத்தில்கொண்டே தேசிய நூலக வாரியம் ஈராண்டுகளுக்கு முன்னர், நூலகங்கள் மற்றும் காப்பகங்களுக்கான வழிகாட்டித் திட்டம் 2025ஐத் தொடங்கியது. எல்லாக் காலத்திலும் அனைவருக்கும் அர்த்தமுள்ள வாசிப்பு, கற்றல், கண்டறியும் அனுபவங்களை வழங்குவது இதன் நோக்கம்.

“நூலக உருமாற்றப் பயணத்தில் இன்று நாம் புதிய அடியை எடுத்துவைக்கிறோம். மத்திய பொது நூலகத்தில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய அம்சங்களை நீங்களே பயன்படுத்தி உணர்வது புதிய அனுபவமாக இருக்கும்,” என்று திருமதி டியோ கூறினார்.

சிறுவர்களுக்கான கடல்வாழ் பல்லுயிர்ச்சூழல் நூலகத்தில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து சிறுவர்கள் விரிவாக அறிந்துகொள்வதோடு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் ஆகிய அம்சங்கள் குறித்து குடும்பத்தினரோடு ஒன்றாகக் கற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

சிங்கப்பூரின் பொது நூலகம் ஒன்றில் இத்தகைய கற்றல் தளம் அமைவது இதுவே முதல்முறை.

மத்திய பொது நூலகத்தின் கீழ்த்தளத்தில் இது அமைந்துள்ளது. முன்னதாக, 2013ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான ‘மை டிரீ ஹவுஸ்’ எனும் பசுமை நூலகம் அந்த இடத்தில் அமைந்திருந்தது.

தேசிய நூலக வாரியமும் ‘அமேசான் வெப் சர்வீஸ்’ பிரிவும் இணைந்து உருவாக்கியுள்ள ‘ஸ்டோரிஜென்’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலி இந்த நூலகத்தின் மற்றொரு சிறப்பு அம்சம்.

வருகையாளர்கள் இதன் மூலம் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்கள், கதை அமைப்பு, கதைக்களத்தைப் பயன்படுத்தி கதைகளை உருவாக்கலாம். சங் நீல உத்தமா, லிட்டில் ரெட் ரைடிங் ஹூட், விசார்ட் ஆஃப் ஓஸ் போன்ற புகழ்பெற்ற கதைகளின் அடிப்படையில் அவர்கள் கதைகளை வடிவமைக்கலாம்.

வருகையாளர்கள் உருவாக்கும் கதைகள் வளைந்த சுவர் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள ஆறு காட்சிப் பலகைகளில் காட்டப்படும். கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி அவர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் இயலும்.

சிங்கப்பூர் அல்கோவ் பகுதியில் கேள்வி-பதில் அங்கத்தில் பங்கெடுத்து புத்தகத் தெரிவுக்கான பரிந்துரைகளைப் பெறலாம்.

சென்ற ஆண்டு (2023) கிட்டத்தட்ட 37 மில்லியன் படைப்புகள் இரவல் பெறப்பட்டதாக வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கிருமிப் பரவலுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியிருப்பதைக் குறிக்கிறது.

வாரியத்தின் அனைத்துலகப் பங்காளிகள் மத்திய பொது நூலகத்திற்கு 2,000 தலைப்புகளில் படைப்புகளை நன்கொடையாக வழங்கியிருப்பதாக தேசிய நூலக வாரியம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!