நல்லுறவை மறுஉறுதி செய்த சிங்கப்பூர்-ஜோர்டான்

நல்லுறவை மறுஉறுதி செய்த சிங்கப்பூர்-ஜோர்டான்

2 mins read
82dc55ba-08b2-4962-8f58-103f74281f4d
ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல் உசேன் அப்துல்லாவுடன் (இடது), பிரதமர் லீ சியன் லூங் கலந்துரையாடினார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூருக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான நல்லுறவு மறுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் லீ சியன் லூங், ஜோர்டானியப் பட்டத்து இளவரசர் அல் உசேன் அப்துல்லா ஆகியோர் இடையிலான சந்திப்புக்குப் பிறகு புதிய அம்சங்களில் இருதரப்பு உறவு விரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் உசேன் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டார்.

அவரது பயணம் ஜனவரி 12 தேதியன்று நிறைவு பெற்றது.

பிரதமர் லீ, இளவரசர் உசேன் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையிலான ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இளையர் மேம்பாடு, சுற்றுப்புற நிர்வாகம், தொழில்சார்ந்த மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி, அரசாங்கச் சேவைப் பயிற்சி, ஹலால் உணவு சான்றிதழ் மற்றும் தரநிலை ஆகியவை தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12ஆம் தேதியன்று பிரதமர் லீ நடத்திய மதிய உணவு உபசரிப்பில் இளவரசர் உசேன் கலந்துகொண்டார்.

அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் பிரதமர் லீயையும் அவர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.

மத்தியக் கிழக்கு நிகழ்வுகள் குறித்து தலைவர்கள் கலந்துரையாடினர். இதில் காஸாவில் ஏற்பட்டுள்ள அவலநிலை குறித்தும் அவர்கள் பேசினர்.

சிங்கப்பூரும் ஜோர்டானும் பொதுவான இலக்கைக் கொண்டுள்ள நாடுகள் என்று மதிய உணவின்போது பிரதமர் லீ தெரிவித்தார்.

இரு சிறிய நாடுகளும் மற்ற நாடுகளுடன் நல்லுறுவு வைத்திருக்கும் அணுகுமுறையையும் உலகளாவிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளும் தன்மையையும் கொண்டிருப்பதாக திரு லீ கூறினார்.

இருநாடுகளும் பல்வேறு வழிகளில் ஒத்துழைத்துள்ளதை அவர் சுட்டினார்.

ஆசியா-மத்தியக் கிழக்கு கலந்துரையாடல் கட்டமைப்பின்கீழ் ஆற்றலை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் லீ உதாரணமாகக் காட்டினார்.

2005ஆம் ஆண்டில் ஜோர்டானுடன் சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதுவே மத்தியக் கிழக்கு நாட்டுடன் சிங்கப்பூர் கையெழுத்திட்ட முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்