தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி செங்காங்கிற்கு இடம் மாறும்

2 mins read
94ef524a-21df-4429-8476-52aefe9412bc
ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி 2026 ஆம் ஆண்டில் யார்க் ஹில் வட்டாரத்திலிருந்து ஏங்கர்வேல் கிரசெண்ட் வட்டாரத்திற்கு இடமாறும் என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 16) அறிவித்தது. - படம்: ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி / ஃபேஸ்புக்

ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி 2026ஆம் ஆண்டில் யார்க் ஹில் வட்டாரத்திலிருந்து செங்காங்கில் உள்ள ஆங்கர்வேல் கிரசெண்ட் வட்டாரத்திற்கு இடம் மாறும்  என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 16) அறிவித்தது.

தற்போது, யார்க் ஹில்லில் உயர்நிலைப் பள்ளிக்கான தேவை குறைந்து வருகிறது.

வடகிழக்குப் பகுதியில் உயர்நிலைப் பள்ளிக்கான தேவை அதிகரித்துக் கொண்டு வருவதால், ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி செங்காங்கிற்கு  இடமாறுவது அத்தேவையைப் பூர்த்திசெய்யும் என்று கல்வி அமைச்சு கூறியது. 

இடம் மாற்றத்திற்குப் பிறகு, புதிதாக உயர்நிலை ஒன்றில் பயிலவிருக்கும் மாணவர்களைப் பள்ளி ஏற்றுக்கொள்ளும். மேலும், 2027ஆம் ஆண்டு வரை யார்க் ஹில், செங்காங் என இரண்டு இடங்களில் அப்பள்ளி இயங்கும் என்று கூறப்படுகிறது. 

மாறிவரும் பள்ளி மற்றும்  பாலர் பள்ளி தேவைகளைப் நிறைவேற்றுவதற்கான கல்வி அமைச்சு திட்டங்களின் ஒரு பகுதியாக ஊட்ரம்  உயர்நிலை பள்ளியின் இடமாற்றம் அமைகிறது. 

மற்றப் பள்ளிகளின் இடமாற்றம் பற்றியும் மூடப்படும் பள்ளிகளின் விவரங்கள்  பற்றியும் அமைச்சு அறிவித்தது. 

கிராஞ்சி தொடக்கப் பள்ளியும் கல்வி அமைச்சின் கிராஞ்சி பாலர் பள்ளியும் 2028ஆம் ஆண்டில் சுவா சூ காங்கிலிருந்து தெங்காவில் உள்ள புதிய வளாகத்திற்கு  இடம் மாறும்.  

எனவே, இந்த இரு பள்ளிகளும் 2025 முதல் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களையும் பாலர் பள்ளி மாணவர்களையும் ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிடும்.

புக்கிட் வியூ பாலர் பள்ளி 2028ஆம் ஆண்டில் திறக்கப்படும்.  

இந்த பாலர் பள்ளி, புக்கிட் பாத்தோக் வெஸ்டில் உள்ள புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியின் புதிய வளாகத்தில் அமைக்கப்படும். 

பிளாங்கா ரைஸ் பாலர் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில்  பாலர் பள்ளிக்கான தேவைகள் குறைவதால்  2024ல் அது பாலர் பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திக்கொண்டது.

மேலும், தெம்பனிஸ் பாலர் பள்ளியும் புதிய தொடக்கப்பள்ளி ஒன்றும் 2029ல் செயல்படத் தொடங்கும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளதால், அங்கு செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் அமைந்துள்ளது.

இந்த பள்ளிகளின் விவரங்களை கல்வி அமைச்சு  பிறகு அறிவிக்கும். 

குறிப்புச் சொற்கள்