தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்ஏஎஸ் முன்னாள் துணை இயக்குநருக்குச் சிறை

2 mins read
982967f5-4766-4bb8-a920-f62b787a1c51
குற்றவாளியான ரிக்ராம் ஜித் சிங் ரந்தீர் சிங் (இடது), அவரது மனைவி அஸ்யா கிரின் காமேஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் (எஃப்ஏஎஸ்) முன்னாள் துணை இயக்குநரான ரிக்ராம் ஜித் சிங் ரந்தீர் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) 55 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கும் தனது மனைவிக்கும் தொடர்பிருந்த நிறுவனங்களோடு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை ஒப்பந்தம் செய்துகொள்ள வைத்ததற்காக 43 வயது ரிக்ராமுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்தகைய ஒப்பந்தங்களுக்காக ரிக்ராம், சங்கத்தை 609,380 வெள்ளி செலவிடச் செய்தார்.

அந்தத் தொகையிலிருந்து இருவரும் 127,896 வெள்ளி லாபம் பார்த்தனர்.

அவர்கள் லாபமாக ஈட்டிய தொகையை ல‌ஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்தது. அத்தொகை மீண்டும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏமாற்றியதாக தன் மீது சுமத்தப்பட்ட 15 குற்றச்சாட்டுகளை இம்மாதம் மூன்றாம் தேதியன்று ரிக்ராம் ஒப்புக்கொண்டார். அவருக்குத் தீர்ப்பளிக்கும்போது மேலும் 30 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

அவரின் மனைவியான 36 வயது அஸ்யா கிரின் காமேஸ் மீது 46 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஏமாற்றுச் செயல்கள் தொடர்புடையவை.

திருவாட்டி அஸ்யா மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் செவ்வாய்க்கிழமையன்று மீட்டுக்கொள்ளப்பட்டன. அதோடு, அவர் மீது இதே குற்றச்சாட்டுகளை இனி சுமத்த முடியாது என்றும் உத்தரவிடப்பட்டது. அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து ரிக்ராம், அஸ்யாவின் குடும்பம் நிம்மதியடைந்துள்ளதாகவும் இனி அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடரலாம் என்றும் அவர்களின் வழக்கறிஞர் சட்வான்ட் சிங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்