நான் நிரபராதி; என் மீதான களங்கத்தைத் துடைப்பதில் கவனம் செலுத்துவேன்: ஈஸ்வரன்

2 mins read
47de480b-e390-4de8-bda0-13fbdb5486c7
2007ஆம் ஆண்டு எஃப்1 ‘பிட்’ கட்டடக் கட்டுமானத்திற்கான நிலந்திருந்தும் நிகழ்ச்சியில் பெரும் பணக்காரர் ஓங் பெங் செங் (இடது), அப்போதைய வர்த்தக, தொழில் துணையமைச்சரான எஸ் ஈஸ்வரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தாம் நிரபராதி என்றும் தம் மீதான களங்கத்தைத் துடைப்பதில் இனி கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தம் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் மறுத்ததாக ஊடகத்திற்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 18ஆம் தேதி நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய திரு ஈஸ்வரன்.
ஜனவரி 18ஆம் தேதி நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய திரு ஈஸ்வரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜனவரி 18 ஆம் தேதி , ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இவ்வாறு கூறிய திரு ஈஸ்வரன், 2023 ஜூலையில் தம் மீது விசாரணை தொடங்கியதிலிருந்து தமக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகையையும் திருப்பித் தரவிருக்கிறார்.

“இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதே சரியான முடிவு என்பதால் நானும் எனது குடும்பத்தினரும் இவ்வாறு முடிவெடுத்தோம்.

“விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில் ஓர் அமைச்சராகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ நான் எனது கடமையை ஆற்ற இயலவில்லை. எனவே இந்தப் பணத்தை வைத்துக்கொள்வது தவறு எனத் தோன்றுகிறது,” என்றார் அவர்.

ஜனவரி 18ஆம் தேதி முன்னேரத்தில், திரு ஈஸ்வரன் மக்கள் செயல் கட்சியிலிருந்து விலகியதாகவும் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்தும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகவிருப்பதாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் லீக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில், லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு தம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளைத் தாம் மறுப்பதாக மீண்டும் வலியுறுத்திய அவர், தாம் வகிக்கும் பல்வேறு பொறுப்புகளிலிருந்து விலகுவதே சரியான முடிவு எனத் தமக்குத் தோன்றுவதாக அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி 17ஆம் தேதி பிரதமருக்கு அனுப்பிய மற்றொரு கடித்ததில் தமது சம்பளத்தையும் படித்தொகையையும் திருப்பித் தரவிருப்பதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் தாம் இந்தத் தொகையை மீண்டும் கோரப் போவதில்லை என்றார் அவர்.

அவரது கடிதத்திற்குப் பதிலளித்த பிரதமர் லீ, திரு ஈஸ்வரன் இத்தகைய சூழலில் அரசியலிலிருந்து விலகுவது தமக்கு ஏமாற்றமும் வருத்தமும் அளிப்பதாகக் கூறினார்.

“இருப்பினும் இத்தகைய விவகாரங்களை, சட்டத்துக்கேற்ப நான் கடுமையாகக் கையாள வேண்டியது அவசியம். அதுதான் சரியான செயலும்கூட. கட்சி, அரசாங்கம் இரண்டின் நேர்மையை நாம் கட்டிக்காக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்,” என்று திரு லீ கூறினார்.

இந்நிலையில், திரு ஈஸ்வரன் சம்பளத்தையும் படித்தொகையையும் தாமாகவே முன்வந்து திருப்பித் தந்ததைத் தமது கட்சி பாராட்டுவதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்