பிரான்சின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டலுக்குப் பிரதமர் லீ வாழ்த்து

பிரான்சின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டலுக்குப் பிரதமர் லீ வாழ்த்து

1 mins read
346a1682-8501-402a-9cd3-cc330e1640bf
பிரான்சின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல், 34. - படம்: ஏஎப்ஃப்பி

பிரதமர் லீ சியன் லூங், பிரான்சின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு கேப்ரியல் அட்டலுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

வெளியுறவு அமைச்சு ஜனவரி 18ஆம் தேதி அதனைத் தெரிவித்தது.

34 வயதாகும் திரு அட்டல், ஜனவரி 9ஆம் தேதி பிரான்சின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். பிரான்சில் பிரதமர் பதவியை ஏற்கும் ஆக இளையவர் என்ற சிறப்பு அவரைச் சாரும்.

தமது கடிதத்தில் திரு அட்டலுக்கு வாழ்த்து தெரிவித்த திரு லீ, சிங்கப்பூரும் பிரான்சும் வர்த்தகம், முதலீடு, எரிபொருள், தற்காப்பு, புத்தாக்கம், கலாசாரம், கல்வி ஆகிய துறைகளில் உத்திபூர்வ பங்காளிகள் என்பதைக் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு மின்னிலக்க, பசுமைப் பங்காளித்துவ உடன்படிக்கை கையெழுத்தான பிறகு இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் விரிவடைவதாகவும் அதிவேக வளர்ச்சி காணும் மின்னிலக்க, நீடித்த நிலைத்தன்மை மிக்க பொருளியல்களில் நிறுவனங்கள் வெற்றிபெற உதவுவது இதன் இலக்கு என்றும் பிரதமர் லீ அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையிலான தற்காப்புப் பங்காளித்துவத்தையும் அவர் தமது கடிதத்தில் நினைவுகூர்ந்தார்.

அடுத்த ஆண்டு (2025) சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவுறும். இவ்வேளையில், சிங்கப்பூருக்கு விரைவில் வருகை தரும்படி திரு அட்டலுக்குப் பிரதமர் லீ அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்