இந்திய கலாசார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் ‘நமஸ்தே பாரத் 2024’

இந்திய கலாசார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் ‘நமஸ்தே பாரத் 2024’

1 mins read
b57cb2fe-4a88-43f2-a5a1-90de488c71bb
இந்திய கலை, கலாசார அனுபவங்களை சிங்கப்பூரில் வழங்கும் நமஸ்தே பாரத் 2024 . - படம்: நமஸ்தே பாரத் இணையப்பக்கம்

சிங்கப்பூரில் இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘நமஸ்தே பாரத்’, இவ்வாண்டு சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஜனவரி 25 முதல் ஜனவரி 28 வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடிகையும் இந்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ சுந்தர், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்திய குடியரசு தினவிழாக் காலத்தில் நடத்தப்படும் இந்நிகழ்வு, பல இந்திய வணிகர்களை, பிற வணிகர்களுடனும் பயனீட்டாளர்களுடனும் இணைக்கிறது.

நான்கு நாள்கள் நடக்கும் இந்நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட சாவடிகளில், உணவு, நவநாகரிகத் தயாரிப்புகள், இயற்கைப் பொருள்கள், கைவினைக் கலைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்படும். இந்திய மரபுடைமையை எடுத்துக்காட்டும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், யோகா உள்ளிட்ட நிகழ்வுகளும் நடக்க உள்ளன.

‘டி ஐடியாஸ்’ நிறுவனத்தின் கருத்துருவாக்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ‘மேட் இன் இந்தியா’ எனும் கருப்பொருளில், தனித்துவமான இந்திய கைவினைக் கலைப்பொருள்களைக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு இடம்பெறும். நூற்றாண்டுப் பழைமைமிக்க நெசவுப் பாரம்பரியத்துடன் கூடிய புதுப்பாணி ஆடைகளும் காட்சிப்படுத்தப்படும்.

கவிதை வாசிப்பு நிகழ்ச்சி, புத்தக வெளியீடு போன்ற இலக்கிய நிகழ்வுகளும், பார்வையாளர்களுக்கு பலதிறன் போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்