வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் அலங்காரம் செய்யும்போது, நெருக்கடி நேரப் பாதுகாப்பு, பொது இடங்களை நிரப்பும் தேவையற்ற பொருள்கள் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டுமென்று வல்லுநர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.
ஒருவர் கண்ணுக்கு விருந்தளிக்கும் அலங்காரம் மற்றவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போகலாம் என்பதை அவர்கள் சுட்டினர்.
செஞ்சா ஹைட்ஸ் குடியிருப்பாளர் ஒருவர் தன் வீட்டு வெளிச் சுவரில் வைத்திருந்த அலங்காரப் பதாகைகளை அப்புறப்படுத்தும்படி அண்மையில் நகர மன்றம் அவரைக் கேட்டுக்கொண்டது. அதையடுத்து இவ்விவகாரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திருவாட்டி சான், 200 கிராம் எடையுள்ள, மரச்சட்டமிட்ட மூன்று கான்வாஸ் பதாகைகளை வீட்டு வெளிச் சுவரில் மாட்டியிருந்தார். சில தற்காலிக ஒட்டுவில்லைகளையும் பொருத்தியிருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு வீடுகளின் சுவர்ப் பகுதியை நிரப்பிய அந்த அலங்காரங்களை சுவருக்கு எவ்விதச் சேதமுமின்றி எளிதாக அகற்ற முடியும் என்றார் அவர்.
ஆறு மாத காலமாக அந்த அலங்காரங்கள் சுவரில் இருந்ததாகவும் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அவற்றை அப்புறப்படுத்தும்படி ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் நகர மன்றத்திடமிருந்து கடிதம் வந்ததாகவும் திருவாட்டி சான் கூறினார்.
சட்டத்துக்குப் புறம்பாகவோ மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும்படியோ பொதுச் சொத்தை சேதப்படுத்தும்படியோ இல்லாமல் தனது அலங்காரத்தை அமைக்கக் கூடுதல் கவனம் செலுத்தியதால் அக்கடிதம் தனக்குக் குழப்பம் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
அக்கம்பக்கப் பேட்டைகளில் சில குடியிருப்பாளர்கள் இதேபோன்ற அல்லது இதைவிடப் பெரிதான அலங்காரங்களைச் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். அப்பதிவுகள் இணையத்தில் வெகுவாகப் பரவியுள்ளன என்று கூறிய திருவாட்டி சான், சில நகர மன்றங்கள் அனுமதிக்கும்போது ஏன் வேறு சில நகர மன்றங்கள் அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த நகர மன்றம், பொது இடங்களில் பண்டிகைக் காலங்களில் அமைக்கப்படும் தற்காலிக அலங்காரங்களை அது தீவிரமாகக் கருதவில்லை என்று கூறியது.
ஆனால் நிரந்தர அலங்காரங்கள் பொது இடங்களின் உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தவும் கறையாக்கவும் வாய்ப்பு இருப்பதாக நகர மன்றம் குறிப்பிட்டது.
துப்புரவுப் பணிகளுக்கும் பராமரிப்புப் பணிகளுக்கும் அத்தகைய அலங்காரங்கள் இடையூறாக இருக்கும் என்பதை அது சுட்டியது.
இதன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியாவை அணுகியதாகவும் அவரின் உதவியோடு நகர மன்றத்திடம் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் திருவாட்டி சான் கூறினார். தனது தளத்தில் குடியிருக்கும் அனைவரின் கையொப்பங்களுடன் கூடிய ஆதரவுக் கடிதத்தையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.