கருத்தடை குறித்து கூடுதல் விழிப்புணர்வு; பதின்மவயதினருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது

2 mins read
b7c02b07-7a17-43b0-90be-c3c0b1b2e480
2022ஆம் ஆண்டில் 19 வயதும் அதற்கும் குறைந்த வயதுடைய பதின்மவயதினருக்கு 218 குழந்தைகள் பிறந்தன. 2013ஆம் ஆண்டில் பதின்மயதினருக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 487. - படம்: இணையம்

பதின்ம வயதினருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.

கருத்தடை குறித்து பதின்ம வயதினரிடையே கூடுதல் விழிப்புணர்வு இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆலோசர்கள் தெரிவிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டில் 19 வயதும் அதற்கும் குறைந்த வயதுடைய பதின்மவயதினருக்கு 218 குழந்தைகள் பிறந்தன.

2013ஆம் ஆண்டில் பதின்ம வயதினருக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 487.

இந்தத் தகவலைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வெளியிட்டது.

இதற்கிடையே, கடந்த பத்தாண்டுகளில் பதின்மவயதினர் செய்துகொண்ட கருக்கலைப்பு குறித்து சுகாதார அமைச்சிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியது.

2018ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டிலிருந்து கருக்கலைப்பு விகிதத்தில் பெரிதளவில் மாற்றம் ஏதும் இல்லை என்று சுகாதார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அந்தக் காலகட்டத்தில் 1,000 பதின்மவயதினரில் இருவர் கருக்கலைப்பு செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பதின்மவயதினருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதால் பாலியல் உறவு கொள்ளும் பதின்ம வயதினர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்று கருதிவிடக்கூடாது என்று ஆலோசகர்கள் கூறினர்.

14 வயது சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட பிறகு, கர்ப்பமான 15 சிறுமி தொடர்பாக வழக்கு விசாரணை அண்மையில் நடந்தது. அச்சிறுமி கர்ப்பமானதைப் பெற்றோரிடமிருந்து மறைக்க அவர்கள் இருவரும் சொந்தமாகக் கருக்கலைப்பு செய்ய முயன்றனர்.

2021ஆம் ஆண்டில் அந்தக் குழந்தை இறந்து பிறந்தது.

குழந்தையின் உடலை இரண்டு நாள்களுக்கு அலமாரியில் வைத்திருந்த அந்தச் சிறுமி, பிறகு அதைத் தோட்டத்தில் புதைத்தார்.

குறைந்த வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டது, குழந்தை பிறந்ததை மறைப்பதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றங்கள் தொடர்பாக அந்தச் சிறுவனுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது. அவருக்கு இப்போது 18 வயது.

சம்பந்தப்பட்ட சிறுமிக்கு நிபந்தனையுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

16 வயதுக்குக் குறைவானவர் சம்மதித்தாலும் அவருடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட சிறுமி 14 வயதுக்குக் குறைவானவராக இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடவடிக்கைகளில் பதின்மவயதினர் ஈடுபடுவதைத் தடுக்க பாலியல் கல்வி மிகவும் முக்கியம் என்று ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போதுதான் கர்ப்பமாவதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி பதின்மவயதினருக்குத் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆண்-பெண் உறவு, பாலியல் உறவு போன்றவை குறித்து தங்கள் பிள்ளைகளுடன் பெற்றோர் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும் ஆலோசகர்கள் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்