சட்டவிரோதமாக அறைகலன்களை அகற்றியவருக்கு $8,000 அபராதம்

1 mins read
531928f6-8088-448c-a53d-3c3b328efdd2
தேவையற்ற அறைகலன்களை சட்டவிரோதமாக அகற்றிய மேற்பார்வையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  - படம்: தேசிய சுற்றுப்புற அமைப்பு

தேவையற்ற அறைகலன்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியதன் தொடர்பில், பொருள்களை இடமாற்ற உதவும் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான சியாவ் வெய் வென்னுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பீச் ரோட்டில் செயல்பட்ட அலுவலகம் ஒன்று காலியானதும் அதிலிருந்த தேவையற்ற அறைகலன்களை சுங்கை காடுட் டிரைவில் உள்ள மறுசுழற்சி ஆலைக்குக் கொண்டுசெல்லும் வேலையை அவர் மேற்கொண்டார்.  சென்ற ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி அவர் அப்பணியில் ஈடுபட்டதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

ஆனால், லோர்னி நெடுஞ்சாலைக்கு அருகே கீம் ஹாக் ரோட்டில் உள்ள ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் அந்த அறைகலன் குப்பைகளை சியாவ் கொட்டினார்.

அவரது இச்செயல்களுக்கு, $50,000 வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். 

பொது இடத்தில் குப்பை போடுதல் அல்லது அதை அனுமதித்தல் குற்றமாகும். 

அத்தகைய செயல்களில் ஈடுபடத் தங்கள் ஊழியர்களைப் பணிக்கும் மேற்பார்வையாளர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்