தனித்துவம் பேணும் தைப்பூசம்

தைப்பூசம் சிங்கப்பூரின் பல்லின பலசமய கலாசாரத்தைப் பறைசாற்றும் தனித்துவமான ஓர் அடையாளம் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ.

உள்துறை இரண்டாம் அமைச்சருமான அவர், வியாழக்கிழமை (ஜனவரி 25) தைப்பூசத் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார்.

பிற இன, சமயங்களைச் சேர்ந்தோரையும் தைப்பூசம் அரவணைத்துள்ளதைச் சுட்டிய அமைச்சர் , சிங்கப்பூர் அதிநவீனமயமாகும் அதே வேளையில் மரபுடைமையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஜாலான் புசார் - கிரேத்தா ஆயர் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர், நண்பர்களுக்கு உதவிய பிற இனத்தோர், இளைய பக்தர்கள் ஆகியோரின் பங்குகள் குறித்து அவர் பாராட்டினார்.

“யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாசார, மரபுடைமைப் பட்டியலில் தைப்பூசம் இடம்பெறும்,” என்று தமிழ் முரசிடம் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாசார, மரபுடைமைப் பட்டியலில் தைப்பூசம் இடம்பெறும்
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ

இதன் வாயிலாக, சிங்கப்பூரின் பண்பாடு உலகளவில் அங்கீகரிக்கப்படுவதோடு, இளம் நாட்டுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நம் மரபுடைமைக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாகவும் அமையும் என்றார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் இத்திருவிழாவைக் காணும் வாய்ப்பை அதிகரிக்கவேண்டும் என்று கோயில் நிர்வாகக் குழுவினரிடம் அவர் கருத்து தெரிவித்தார்.

“அதிவேகமான, பரபரப்பான சிங்கப்பூர் எவ்வளவு நவீனமயமானாலும், தைப்பூசம் போன்ற விழாக்கள் நமது மரபுடைமையைக் காக்கின்றன. அவற்றில் இளையர்களின் பங்கேற்பு நிறைவளிக்கிறது. பல சமயத்தினரிடையே சகிப்புத்தன்மையை இவ்விழாக்கள் வளர்க்கின்றன,” என்றார் திருவாட்டி ஜோசஃபின் டியோ

இவ்வாண்டு தைப்பூசத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 18,000 பக்தர்கள் கலந்துகொண்டனர். 12,800 பேர் பால்குடம் எடுத்ததாகவும் 274 பேர் காவடி ஏந்திச் சென்று காணிக்கை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காவடியை சுமந்து வந்து தேங்க் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு தெண்டாயுத பாணி கோயிலை அடைந்த பக்தர். படம்: எஸ்பிஎச்

பக்தர்கள் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து தேங்க் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் வரை 3.2 கிலோ மீட்டர் நடந்து சென்று தங்களது காணிக்கைகளைச் செலுத்தினர். புதன்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து வியாழக்கிழமை இரவு வரை விழா நீடித்தது.

இந்த ஆண்டு தைப்பூச விழாவில் கூடுதலாக இரண்டு நேரடி இசைக் கூடங்கள் அமைக்கவும் இசைக்குழுக்கள் நான்கு இசைக்கருவிகள் வரை வாசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் அன்னதானம் அளிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

பக்தர்களின் தாகத்தைத் தீர்க்க பக்தர்கள் நடைப்பயணம் செல்லும் வழியில் 20க்கு மேற்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நீண்டநேரக் காத்திருப்பு

ஊர்வல ஏற்பாடுகள் பெரும்பாலும் சீராக இருந்தாலும், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை நோக்கிச் சென்ற ஊர்வலப் பகுதியில் பிற்பகலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கிளமென்சியூ அவென்யூ, பினாங்கு ரோடு பகுதிகளில் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட மக்கள் மழையில் அதிக நேரம் நிற்கவேண்டியிருந்தது.

ஊர்வலத்தில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் செலவிட்டதாக பக்தர் வி.வித்யா கூறினார். மேலும் காலையில் புறப்பட்ட காவடிகள் பல நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது எனவும் அவர் கூறினார்.

“பொதுமக்களும் காவடி செல்லும் வரிசைக்குள் புகுந்ததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது. சக்கர நாற்காலியிலும் நடைப் பயணமாகவும் வந்த முதியோர் பலர் மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருந்தது வேதனை அளிக்கிறது,” என்றார் வித்யா, 30.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்தின் செயலாளர் திரு முத்துகணபதி, பிற்பகல் 1.30 மணி அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட செய்தி அறிந்த உடனேயே எல்லாத் தடுப்புகளும் சரியாக இருப்பதை மறுஉறுதி செய்ததாகவும் அதையடுத்து நிலைமை மேம்பட்டதாகவும் தெரிவித்தார். பிற்பகலுக்குப் பின்னர் கூட்ட நெரிசல் சீராகி வழக்கநிலைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் தலைவர் திரு செல்வம் வரதப்பன் கூறுகையில், தைப்பூச விழா இவ்வாண்டு வார நாளில் கொண்டாடப்பட்டாலும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான பக்தர்கள் வருகை தந்ததாகக் கூறினார்.

ஐந்து மாத முன்னேற்பாடுகள், 1,500 தொண்டூழியர்களின் சேவை ஆகியவை இந்த ஆண்டு தைப்பூச விழாவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளதாக ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் தலைவர் திரு செல்வம் வரதப்பன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!