காலஞ்சென்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சருக்கு ஜனவரி 25ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.
மறைந்த டாக்டர் கிஸிஞ்சருடன் பழகக் கிடைத்த வாய்ப்பைத் தமக்குக் கிடைத்த சிறப்பாகவும் பெருமையாகவும் கருதுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
தாமும் தம் மனைவியார் ஹோ சிங்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் டாக்டர் கிஸிஞ்சருக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக திரு லீ கூறினார்.
திருமதி நான்சி கிஸிஞ்சருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதாக ஜனவரி 26ஆம் தேதி பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இரு அதிபர்களின்கீழ் பணியாற்றிய டாக்டர் கிஸிஞ்சர், 2023ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி கனெக்டிகட்டில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
டாக்டர் கிஸிஞ்சர் உலகில் ஆழமான முத்திரை பதித்த மிகப் பெரிய அரசதந்திரி என்று கூறிய பிரதமர் லீ, “அவர் சிங்கப்பூருக்கு அணுக்கமான நண்பராகவும் எனக்கும் என் தந்தைக்கும் அன்பான நண்பராகவும் விளங்கியவர்,” என்று குறிப்பிட்டார்.
பிரதமர் லீ, ஜனவரி 24 முதல் 27ஆம் தேதி வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு நியூயார்க் சென்றுள்ளார்.

