சிங்கப்பூரில் குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவும் புதிய இணையவாசல், ஜனவரி 26ஆம் தேதி முதல் சேவை வழங்குகிறது.
இத்தகைய ஊழியர்கள் தங்கள் வேலைக்கு ஏற்ற சரியான சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை இந்த இணையவாசல் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
‘புரோக்ரெசிவ் வேஜ் போர்ட்டல்’ (பிடபிள்யூ இணையவாசல்) என்பது இந்த இணையவாசலின் பெயர்.
படிப்படியாக உயரும் சம்பள முறை (பிடபிள்யூஎம்) அல்லது உள்ளூர் தகுதிபெறும் சம்பளம் (எல்கியூஎஸ்) ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு தங்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படுகிறதா என இந்த இணையவாசல் மூலம் குறைந்த வருமான ஊழியர்கள் தெரிந்துகொள்ளலாம்.
முதலாளிகள் தங்களுக்கு அளித்துள்ள வேலையின் தன்மை குறித்தும் ஊழியர்கள் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இந்த இணையவாசல் முழுநேர வேலையில் உள்ள குறைந்த வருமான ஊழியர்கள் 234,000 பேர் உட்பட, பிடபிள்யூஎம், எல்கியூஎஸ் இரண்டின்கீழ் வரும் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று மனிதவளத் துணையமைச்சர் ஸாக்கி முகமது கூறினார்.
அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக, பொதுவான துப்புரவு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் அடுத்த ஆறு ஆண்டுகளில் 85 விழுக்காடு உயரும். 2022ல் $1,312ஆக இருந்த அது 2028ஆம் ஆண்டில் $2,420ஆக இருக்கும் என்றார் திரு ஸாக்கி.
புதிய இணையவாசலின் முகவரி go.gov.sg/pw-portal என்பதாகும்.
இதன் மூலம் தங்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரியவந்தால், ஊழியர்கள் அதுகுறித்து முதலாளிகளைக் கேட்கலாம் அல்லது மனிதவள அமைச்சை நாடலாம்.