லாவோஸ் அதன் வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் உதவ முடியும்: அமைச்சர் விவியன்

லாவோஸ் அதன் வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் உதவ முடியும்: அமைச்சர் விவியன்

1 mins read
4c08ee57-51f7-46a8-8f2e-bdcb9afd6c3e
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது), லாவோஸ் பிரதமர் சோனக்சே சிஃபண்டோன் சனிக்கிழமை சந்தித்தனர். - படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

வியந்தியன்: நிதிச் சிக்கலை லாவோஸ் சந்தித்தபோதிலும் அங்கு ஏராளமான பொருளியல் வாய்ப்புகள் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

சரியான உள்கட்டமைப்பும் கொள்கைகளும் வடிவமைக்கப்பட்டால் லாவோஸ் செழிப்படையும் என்றார் அவர்.

டாக்டர் விவியன் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு வியேந்தியன் சென்றுள்ளார்.

கல்வி, பயிற்சி ஆகியவற்றின் மூலம் லாவோஸ் அதன் பொருளியல் திறனின் உச்சத்தை எட்டுவதற்கு சிங்கப்பூர் வியேந்தியனுடன் அணுக்கமாகப் பணியாற்ற முடியும் என்றார் அவர்.

உலகச் சந்தையில் கால்பதிப்பதற்கும் லாவோசிற்கு சிங்கப்பூர் உதவ முடியும் என்றார் அமைச்சர்.

லாவோஸ் பிரதமர் சோனக்சே சிஃபண்டோன், அதன் வெளியுறவு அமைச்சர் சலி­யும்சே கோம்­மா­சித், லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் வெளியுறவுக் குழுத் தலைவர் தோங்சாவான் ஃபோம்விஹானே ஆகியோரையும் டாக்டர் விவியன் சந்தித்தார்.

உலகில் எஞ்சியுள்ள மிகக் குறைவான கம்யூனிஸ்ட் நாடுகளில் லாவோசும் அடங்கும். தற்போது அது மெதுவடையும் பொருளியல் வளர்ச்சி, அதிகரிக்கும் கடன் சுமை, பணவீக்கம் ஆகியவற்றால் சிரமத்தை எதிர்கொள்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விவியன், “தற்போது புதிய தொழில்நுட்பப் புரட்சியின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.

“செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கமயமாதல், செயற்கை உயிரியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற அம்சங்களின் மேம்பாட்டால் மேலும் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய பாதுகாப்பான உலகை உருவாக்க இயலும்,” என்று கூறினார்.

இத்தகைய அம்சங்கள் லாவோசிற்கு வாய்ப்புகளைத் தரும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்