கிளமென்டியில் வாகன விபத்து

கிளமென்டியில் வாகன விபத்து

1 mins read
282ee438-be9c-465d-ba6b-9fc80f9f247e
எண்பது வயது பெண் ஓட்டுநர் ஒருவர், சனிக்கிழமையன்று (ஜனவரி 27) தன் கட்டுப்பாட்டை இழந்து கிளமென்டியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் தடுப்புகள் மீது மோதினார்.   - படம்: ஷின் மின் செய்தி ஊடகம்

எண்பது வயது பெண் ஓட்டுநர் ஒருவர், சனிக்கிழமையன்று (ஜனவரி 27) தமது காரின் கட்டுப்பாட்டை இழந்து கிளமெண்டியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் தடுப்புவேலி மீது மோதினார்.  

6 லெம்பெங் டிரைவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல் மாலை 6.20 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.  

அந்த ஓட்டுநரும் அவருடன் வாகனத்தில் இருந்த 80 வயது பயணியும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வசித்த 56 வயதான திரு சு என்பவர், கீச்சென்ற ‘பிரேக்’ சத்தத்தை அடுத்து பேரிரைச்சலையும் கேட்டதாக ஷின் மின் ஊடகத்திடம் கூறினார். 

மேலும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் வாகனங்கள் ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்தன என்றும் பயணிகளை வெளியேற்ற அவர்கள் குறைந்தது 15 நிமிடங்களாவது எடுத்துக்கொண்டனர் என்றும் கூறினார்.

கறுப்பு நிற கார் ஒன்று காவல் நிலைய வளாகத்திலிருந்த புல்வெளியில் நின்றிருந்ததைத் திரு சு அந்தச் சீன செய்தி ஊடகத்திற்கு அனுப்பிய புகைப்படம் காட்டியது.

சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. 

குறிப்புச் சொற்கள்