மோசடிவழி இழந்த $13.3 மில்லியனில் மத்திய சேமநிதிப் பணம் $488,000

மோசடிவழி இழந்த $13.3 மில்லியனில் மத்திய சேமநிதிப் பணம் $488,000

2 mins read
f4397f31-0cbc-4970-8d85-71f20de0bf73
மூன்று மோசடிச் சம்பவங்களில் சுமார் $488,000 மதிப்பிலான பணம், மத்திய சேமநிதிக் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க அதிகாரிகள் போல் மோசடிக்காரர்கள் பாசாங்கு செய்த சம்பவங்களில் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் குறைந்தது 120 பேர் $13.3 மில்லியனை இழந்தனர்.

மோசடிப் பேர்வழிகள் தொடர்புகொண்டு சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து கூடுதல் தகவல் பெறுவதற்காக வங்கி அதிகாரிகளாக நடித்தனர் என்று சிங்கப்பூர் காவல்துறையும் மத்திய சேமநிதிக் கழகமும் பிப்ரவரி 1ஆம் தேதியன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

பின்னர், மோசடிக்குக் குறிவைக்கப்பட்டோர் இத்தகைய பரிவர்த்தனைகளைத் தாங்கள் செய்யவில்லை என்றோ பரிவர்த்தனை தொடர்பான வங்கி அட்டை தங்களிடம் இல்லை என்றோ கூறி மறுத்தபின் தொலைபேசித் தொடர்பு இன்னொரு மோசடிப் பேர்வழிக்கு மாற்றிவிடப்படும்.

அந்த இரண்டாவது மோசடிப் பேர்வழி அரசாங்க அதிகாரியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்டோர் மீது குற்றம் சாட்டுவார்.

அரசாங்கம் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளில் பணத்தை மாற்றிவிட வேண்டும் என்று பின்னர் கூறப்படும். அல்லது, அதிகாரபூர்வ காரணத்துக்காக வங்கிப் பரிவர்த்தனைக்குரிய தனிநபர் விவரங்கள் கேட்கப்படும்.

மோசடிக்காரர்களுடன் தொடர்புகொள்ள முடியாதபோது, அல்லது தங்களின் வங்கிகளை அல்லது காவல்துறையினரைக் கேட்டறிந்தபோதுதான் தாங்கள் மோசடிக்கு ஆளாகியுள்ளதைப் பாதிக்கப்பட்டோர் உணர்ந்தனர்.

இந்நிலையில், மூன்று சம்பவங்களில் சுமார் $488,000 மதிப்பிலான பணம், மத்திய சேமநிதிக் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் பணத்தைத் தங்களின் மத்திய சேமநிதிக் கணக்குகளிலிருந்து அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.

பின்னர், வேறு வங்கிக் கணக்குக்கு அந்தப் பணத்தை மாற்ற வேண்டும், அல்லது வங்கிப் பரிவர்த்தனைக்கான அவர்களின் தனிநபர் விவரங்களை வழங்க வேண்டும் என்று மோசடிக்காரர்கள் கூறுவர்.

இதுபோன்ற பணத்தை மாற்றிவிடுதல், வங்கிப் பரிவர்த்தனைக்கான தனிநபர் விவரங்கள், அல்லது மத்திய சேமநிதி தொடர்பான தகவல்களை அரசாங்க அதிகாரிகள் தொலைபேசி வழியாக இவ்வாறு கேட்கமாட்டார்கள் என்று கூட்டறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்