துணி உலர்த்தும் சட்டத்தில் தேன்கூடு

துணி உலர்த்தும் சட்டத்தில் தேன்கூடு

2 mins read
0700b265-2f8d-4e85-982a-ef08de44728f
வாரயிறுதியில் மலேசியா சென்று திரும்பிய பெண்ணின் வீட்டிற்குள் இருந்த துணி உலர்த்தும் சட்டத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள். - படம்: ஷின் மின் நாளேடு

சென்ற வாரயிறுதியில் மலேசியா சென்று திரும்பிய 29 வயது யீ எனும் பெண்ணுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி!

அவர் துணி உலர்த்தப் பயன்படுத்தும் சட்டத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.

புளோக் 17, கண்டோன்மென்ட் குளோசில் வசிக்கிறார் யீ.

ஜனவரி 26ஆம் தேதி மலேசியா சென்ற அவர், சன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய அவர், உறங்கச் சென்றுவிட்டார்.

திங்கட்கிழமை (ஜனவரி 29) காலை வரை யீ, தன் வீட்டில் இருந்த தேன்கூடு பற்றி அறிந்திருக்கவில்லை.

“முதலில் ஏதோ கிழிந்த துணி என்றுதான் நினைத்தேன். பின்னர் அருகே நெருங்கிச் சென்று பார்த்தபோதுதான் அது தேன்கூடு என்று தெரிந்தது,” என்றார் யீ.

அச்சமடைந்த அவர், என்ன செய்வது என்று தெரியாமல் ஃபேஸ்புக்கில் இதுகுறித்து ஆலோசனை கேட்டார்.

இணையவாசிகள் பலரும் நகரமன்றத்தைத் தொடர்புகொள்ளச் சொல்லவே தஞ்சோங் பகார் நகர மன்றத்திடம் தெரிவித்தார்.

யீ வீட்டிலிருந்த தேன்கூடு தொடர்பில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக அந்நகரமன்றம் ஷின் மின் நாளேட்டிடம் குறிப்பிட்டது.

பூச்சிக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அப்பெண்ணின் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்றும் திங்கட்கிழமை நண்பகலுக்குள் அந்தத் தேன்கூடு அகற்றப்பட்டது என்றும் தெரிகிறது.

ஷின் மின் நாளேட்டிடம் பேசிய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனமான பெஸ்ட்-புரோவின் ஊழியர், உட்புறத்தில் தேன்கூட்டைத் தான் பார்த்தது இதுவே முதல்முறை என்றார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இத்துறையில் வேலைபார்க்கும் அவர், இரண்டே நிமிடங்களில் அந்தச் சிறிய தேன்கூடு அகற்றப்பட்டதாகக் கூறினார்.

ஒருவேளை தேன்கூட்டைக் கண்டால் அதை அப்புறப்படுத்த புகையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார். அது தேனீக்களுக்குச் சினமூட்டும், அவை தேனீக்கள் அதனால் ஆவேசமாகத் தாக்கக்கூடும் என்றார் அவர்.

திருவாட்டி யீயின் வீட்டில் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்குப் பிறகு இறந்துகிடந்த தேனீக்களை அப்புறப்படுத்த தஞ்சோங் பகார் நகர மன்றம் துப்புரவாளர்களை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்