கட்டுமான ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீட்டில் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம்

எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசாங்க அமைப்புகள், கட்டுமான ஒப்பந்தப் புள்ளிகளை மதிப்பிடும்போது பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரவிருக்கின்றன.

பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுக்கு வழங்கப்பட்ட குறைந்த அளவு முக்கியத்துவத்தின் வரம்பு உயர்த்தப்படுவது இதற்குக் காரணம்.

கடந்த காலச் செயல்பாடுகளுக்கு அப்பால், இனி பாதுகாப்பான கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தவிருக்கும் குத்தகையாளர்கள் சிறப்பான மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெறுவர். அபாயக் கண்காணிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவிருக்கும் குத்தகையாளர்களுக்கும் இது பொருந்தும்.

கட்டட, கட்டுமான ஆணையமும் மனிதவள அமைச்சும் பிப்ரவரி 2ஆம் தேதி அதனைத் தெரிவித்தன.

சிங்கப்பூர்க் கட்டுமானத்துறையில் அரசாங்கம் ஆக அதிகமாகப் பங்களிக்கிறது. இந்த ஆண்டுக்கான (2024) கட்டுமானத் தேவைகளில் ஏறக்குறைய 55 விழுக்காட்டிற்கு, பொதுத்துறை பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு, பொதுத்துறைக் கட்டுமானங்கள் தொடர்பில் $18 முதல் $21 பில்லியன் மதிப்பிலான ஏலக்குத்தகைகள் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

$50 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய அரசாங்கக் கட்டுமானத் திட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட அமைப்புகள் குத்தகையாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கும்.

அவர்கள், சிறந்த பாதுகாப்புத் தரநிலைகளைக் கடைப்பிடிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்க அந்தத் தொகையைப் பயன்படுத்துவர் என்று கூறப்பட்டது.

இந்த நடவடிக்கை, கட்டுமானக் காலகட்டம் முழுவதற்கும் வலுவான பாதுகாப்புக் கலாசாரத்தைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கும் என்று ஆணையமும் அமைச்சும் கூறின.

புதிய விதிமுறைகளின்கீழ், மனிதவள அமைச்சின் பாதுகாப்பு தொடர்பான தகுதிநீக்கக் கட்டமைப்பின்கீழ் இனி சிறிய கட்டுமானத் திட்டங்களும் கண்காணிக்கப்படும்.

தற்போது $3 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான கட்டுமானத் திட்டங்கள் மட்டுமே இவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன. அத்திட்டங்களுக்கான முக்கியக் குத்தகையாளருக்கும் முதல்நிலை துணை குத்தகையாளருக்கும் மட்டுமே இது பொருந்தும்.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து, $90,001 முதல் $1 மில்லியன் வரையிலான மதிப்புள்ள கட்டுமானத் திட்டங்களின் முக்கியக் குத்தகையாளர்களுக்கும் இது பொருந்தும்.

$1 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய கட்டுமானத் திட்டங்களைப் பொறுத்தவரை, முக்கியக் குத்தகையாளர்களுக்கும் அனைத்து நிலைகளில் உள்ள துணைக் குத்தகையாளர்களுக்கும் இனி இது பொருந்தும்.

மனிதவள அமைச்சின் பாதுகாப்பு தொடர்பான தகுதிநீக்கக் கட்டமைப்பின்கீழ், முறையான பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்கத் தவறிய நிறுவனங்கள் பொதுத்துறைக் கட்டுமானத்துக்கான ஏலக்குத்தகையில் பங்கேற்க தற்காலிகத் தடை விதிக்கப்படும். அந்தத் தகுதிநீக்கம் மூன்று மாதங்கள் முதல் ஈராண்டுகள் வரை நடப்பில் இருக்கும்.

அமைச்சின் வர்த்தகக் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவோ மேம்படுத்திக்கொள்ளவோ தவறினால், அவற்றிற்கும் இத்தகைய தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல், $1 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான பொதுத்துறைக் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் கட்டுமானத் தளத்திற்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பயிற்சியை அடையாளம்கண்டு, மேற்கொள்வது கட்டாயம்.

அத்துடன், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான விவரங்களை வழக்கமான இடைவெளியில் பதிவுசெய்வதும், முறையான பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காத துணைக் குத்தகையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி, மேம்பாட்டுத் திட்டங்களை அவை நடைமுறைப்படுத்துவதும் அவசியம்.

மேலும், அபாய மதிப்பீடு செய்து அனைத்துத் துணைக் குத்தகையாளர்களும் உரிய வகையில் செயல்படுவதை அவை உறுதிசெய்ய வேண்டும்.

இறுதியாக, அனைத்து நிலைகளைச் சேர்ந்த துணைக் குத்தகையாளர்களும் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும் திட்டத்தை முக்கியக் குத்தகையாளர்கள் செயல்படுத்துவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது.

திட்டமிடும் கட்டத்திலேயே குத்தகையாளர்கள் பாதுகாப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தி, அதன் தொடர்பில் பரிந்துரைக்க உதவுவதே ஊக்கத்தொகை வழங்கும் நடவடிக்கையின் நோக்கம் என்று மனிதவள அமைச்சும் கட்டட, கட்டுமான ஆணையமும் குறிப்பிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!