தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்ளின் ஹால்ட்டில் உள்ள 2,000 காலி வீடுகள் இடைக்கால வாடகை வீடுகளாக மாறும்

2 mins read
9a8c3850-59f4-49f5-bcd1-de20434c1a65
காமன்வெல்த் டிரைவிலும் தங்ளின் ஹால்ட் ரோட்டிலும் உள்ள வீடுகள் பின்னர் மறுமேம்பாட்டிற்காக இடிக்கப்படவிருக்கின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்ளின் ஹால்ட்டில் உள்ள காலி செய்யப்பட்ட ஏறக்குறைய 2,000 வீடுகள், புதிய பிடிஓ வீடுகளுக்குக் காத்திருக்கும் குடும்பங்களுக்கான இடைக்கால வாடகை வீடுகளாகப் பயன்படுத்தப்படவிருக்கின்றன.

அந்த வட்டாரத்தின் 31 புளோக்குகளில் உள்ள இந்த வீடுகள், 2014ஆம் ஆண்டு, மறுமேம்பாட்டுக்கு அடையாளம் காணப்பட்டவை.

பிபிஎச்எஸ் எனப்படும் புது வீட்டிற்குக் காத்திருப்போருக்கான வாடகை வீட்டுத் திட்டத்தின்கீழ், அடுத்த ஆண்டின் (2025) பிற்பாதியிலிருந்து அந்த வீடுகள் இடைக்கால வாடகைக்கு விடப்படும் என்று பிப்ரவரி 5ஆம் தேதி வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்தது.

இத்திட்டத்தின்கீழ் வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையை 2025க்குள் இருமடங்காக்க, அதாவது 4,000க்கு உயர்த்த, வீவக உறுதியளித்துள்ளது.

காமன்வெல்த் டிரைவிலும் தங்ளின் ஹால்ட் ரோட்டிலும் உள்ள தங்ளின் ஹால்ட் வீடுகள் பின்னர் மறுமேம்பாட்டிற்காக இடிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே அந்த வட்டாரத்திலுள்ள நான்கு புளோக்குகள் தற்போது இடைக்கால வாடகை வீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில் குடியிருந்தவர்கள் டாசன் வட்டாரத்திற்குக் குடிபெயர்ந்ததாக வீவக குறிப்பிட்டது.

அவை எப்போது இடிக்கப்படும் என்பது குறித்த மேல்விவரங்கள் ஆய்வுக்குப்பின் வெளியிடப்படும் என்று கழகம் கூறியது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழைமையான வீடுகளை மேம்படுத்த, தண்ணீர்க் குழாய்களை மாற்றுதல், தரையில் பதிக்கும் கற்களை மாற்றுதல், சாயம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொதுப் பயன்பாட்டிற்கு உரிய இடங்களிலும் மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறும். அந்த வட்டாரத்தில் விளையாட்டுத் திடல்கள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றை அமைப்பது குறித்தும் சில நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக வீவக கூறியது.

குறிப்புச் சொற்கள்