தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$400,000 மோசடி செய்த பெண்ணுக்கு 20 மாதச் சிறை

2 mins read
a775d855-cd8b-45bb-afad-592e1e7a34c0
இந்தோனீசியாவைச் சேர்ந்த ஜெங் ஏ லியெம், 2023 நவம்பரில் ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வங்கி ஆவணங்கள், வழக்கறிஞர் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் போலி நகல்களைக் காட்டி, வீட்டில் உடன் தங்கியிருந்தவரிடம் கடன் வாங்கி மோசடி செய்த பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பார்த்து அவர் பணக்காரர் என்று நம்பிய அவருடன் தங்கியிருந்த 61 வயது ஆடவர், 2022ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரையில் 72 சம்பவங்களில், அப்பெண்ணிடம் 4.6 பில்லியன் ரூப்பியாவைப் (S$393,400) பறிகொடுத்தார்.

இந்தோனீசியரான 47 வயது ஜெங் ஏ லியெம்மிற்கு பிப்ரவரி 6ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

2023 நவம்பரில் அவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது தொடர்பிலான ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட ஆடவரிடம் 4.6 பில்லியன் ரூப்பியாவுக்கும் அதிகமான தொகையை அவர் திருப்பித் தந்ததாகக் கூறப்படுகிறது.

சைனாடவுனில் உள்ள பீப்பிள்’ஸ் பார்க் வளாகத்தில் அவ்விருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் நண்பர்களாயினர்.

தனக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டை விற்ற வகையிலும் தளவாட நிறுவனத்தில் இருந்த பங்குகளை விற்றதன் மூலமாகவும் தன்னிடம் அதிக அளவிலான பணம் இருப்பதாக ஆடவரிடம் ஜெங் கூறினார்.

சொந்தமாக கூட்டுரிமை வீடு ஒன்று இருப்பதாகவும் வரி செலுத்தாததால் அதிகாரிகள் தனது வங்கிக் கணக்கை முடக்கியதாகவும் அவர் பொய்யுரைத்தார்.

தனிப்பட்ட கடன்களை அடைப்பதற்கும் பாத்தாமில் சிக்கலை எதிர்நோக்கும் தன் மகளுக்கு உதவவும் தேவைப்படும் பணத்தைக் கடனாகத் தரும்படி அந்த ஆடவரை ஜெங் கேட்டார்.

அந்தப் பொய்களை நம்பிய ஆடவர், பின்னாளில் ஜெங்குடன் சேர்ந்து தொழில் செய்யும் நம்பிக்கையுடன் அவருக்கு உதவ முன்வந்தார்.

இந்தோனீசியாவில் உள்ள ‘லுக்கிடோ’ என்பவரின் உதவியுடன் போலி ஆவணங்களை ஆடவரிடம் காட்டிப் பணம் பெற்ற ஜெங், அதைத் திருப்பித் தராமல் சாக்குப்போக்குக் கூறினார். அதனால் சந்தேகம் எழவே, ஆடவர் காவல்துறையிடம் புகாரளித்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்