தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வருத்தமளிக்கும் காட்சி’: நூற்றுக்கணக்கான மீன்களின் உடல்கள் அகற்றப்பட்டும் துர்நாற்றம் வீசுகிறது

1 mins read
dc4a03f5-b67b-4452-b430-d88c500ed84a
பிப்ரவரி 5ஆம் தேதியன்று காணப்பட்ட மீன்களின் உடல்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈசூனில் மீன் பிடிப்பதற்காக இருந்த குளம் ஒன்று, பயன்படுத்தப்படாமல் போனதை அடுத்து, குளத்தில் நூற்றுக்கணக்கான இறந்த மீன்களிலிருந்து வந்த துர்நாற்றம் குறித்து குடியிருப்பாளர்களும் பொதுப் போக்குவரத்துப் பயனீட்டாளர்களும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அந்தக் குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இருப்பினும், துர்நாற்றம் இன்னமும் அந்தப் பகுதியில் வீசுவதாக அவ்விடத்தின் அருகே செல்வோர் கூறுகின்றனர்.

மீன்களின் உடல்களைக் கொண்ட 20க்கும் மேற்பட்ட கறுப்புக் குப்பைப் பைகளை பிப்ரவரி 6ஆம் தேதியன்று குளத்தின் அருகே காண முடிந்தது.

எம்ஆர்டி ரயிலில் இருந்தபடி குளத்தை அனுதினமும் பார்த்துவந்த பயணி ஒருவர், “பார்ப்பதற்கே வருத்தமளிக்கும் ஒரு காட்சி. ஆக்சிஜனுக்காக மீன்கள் போராடிய பிறகு உயிரிழந்த கொடுமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை,” என்றார்.

ஒரு கட்டத்தில் பிரபலமாக இருந்த அந்தக் குளத்தை ‘ஃபிஷிங் பேரடைஸ்’ நடத்தி வந்தது. மொத்த இடமும் ‘ஓர்ட்டோ’ உல்லாச வளாகமாக இயங்கிவந்தது. இருப்பினும், வாடகைக்கான குத்தகைக் காலம் முடிந்ததன் காரணமாக 2023ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் ‘ஓர்ட்டோ’ இடம் மாறிவிட்டது. ஆனால், மீன்கள் அங்கேயே விடப்பட்டன.

இதற்கிடையே, அப்பகுதியைப் பார்வையிட்ட பிறகு காவல்துறை, வீவக, விலங்கு மருத்துவச் சேவை ஆகியவற்றிடம் புகார் அளித்துள்ளதாக ஏக்கர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்