சீனப் புத்தாண்டின்போது 1,000 பொதுநல மருந்தகங்கள் திறந்திருக்கும்

சீனப் புத்தாண்டின்போது 1,000 பொதுநல மருந்தகங்கள் திறந்திருக்கும்

1 mins read
9e661f50-79b5-4810-9109-3d9e63e8ba9b
கடுமையல்லாத உடல்நலப் பிரச்சினைகளுக்கு பொதுநல மருந்தகங்களை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டுடன் நீண்ட வாரயிறுதி நெருங்கிவிட்ட நிலையில் உடல் நலமில்லாமல் போனாலும் சிங்கப்பூரர்கள் கவலைப்படத் தேவையில்லை.

இங்குள்ள 993 பொதுநல மருந்தகங்கள் பிப்ரவரி 9 முதல் 12 வரை தொடர்ந்து செயல்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு திறந்திருக்கும் பொதுநல மருந்தகங்களின் பெயர்ப் பட்டியலையும் அவை இயங்கும் நேரம் குறித்தும் அந்தந்த மருந்தக இணையத்தளத்திலிருந்து, அல்லது ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, சமூக சுகாதார உதவித் திட்டம் ஆகியவற்றின் இணையத்தளங்களின்வழி மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நான்கு தினங்களும் 24 மணி நேரத்திற்கு மொத்தம் 17 பொதுநல மருந்தகங்கள் செயல்படவுள்ளன. அத்துடன் சீனப் புத்தாண்டின் முதல் நாளான பிப்ரவரி 10ஆம் தேதியன்று 101 பொதுநல மருந்தகங்கள் திறந்திருக்கும்.

சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளன்று 149 பொதுநல மருந்தகங்கள் இயங்கும். பிப்ரவரி 12ஆம் தேதியன்று 250 பொதுநல மருந்தகங்கள் திறந்திருக்கும்.

இதற்கிடையே, கடுமையல்லாத உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பொதுநல மருந்தகங்களை மக்கள் நாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பொதுநல மருந்தகத்திற்குச் செல்வதற்குமுன் முன்பதிவு செய்துகொள்ளுமாறு, அல்லது முன்னரே தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.

நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், கட்டுப்படுத்த முடியாத ரத்தக் கசிவு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள் இருப்போர் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவை நாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்