விபத்தை ஏற்படுத்தியபின் மலேசியாவிற்குத் தப்பியோடிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

விபத்தை ஏற்படுத்தியபின் மலேசியாவிற்குத் தப்பியோடிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
55dc4c7b-bdb7-48fc-991d-c1501b45bd06
2024 பிப்ரவரி 6ஆம் தேதி உட்லண்ட்சை நோக்கிச் சென்ற புக்கிட் தீமா விரைவுச்சாலையில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்து நேர்ந்தது. - படம்: எஸ்பிஎச்

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பிப்ரவரி 6ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் 22 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

மோட்டார்சைக்கிளில் பயணியாக பின்னால் அமர்ந்து சென்ற 23 வயதானவர் கடுமையாகக் காயமுற்றார்.

அவ்விபத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் புவா யுவி லூன், 27, என்ற மலேசியர்மீது வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9)நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அபாயகரமாக வாகனம் ஓட்டி திரு ஜோஷுவா சியாம் சீ வை, 22, என்பவருக்கு மரணம் விளைவித்தது உட்பட மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகள் புவா யுவி லூன்மீது சுமத்தப்பட்டுள்ளன.

திரு சியாம் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற குமாரி சித்தி நூர் தியானா அப்துல் ரஹிம், 23, என்பவருக்குக் கடும் காயம் விளைவித்த குற்றச்சாட்டையும் புவா எதிர்நோக்குகிறார்.

விபத்தில் சிக்கிக் காயமடைந்தோருக்கு உதவ அவர் தமது வாகனத்தை நிறுத்தவில்லை.

விபத்து நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் அதுகுறித்துக் காவல்துறைக்கும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை.

புவா ஓட்டிச் சென்ற வாகனம், திரு சியாமின் மோட்டார்சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. சியாம் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

கடுமையாகக் காயமுற்ற குமாரி சித்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விபத்து நிகழ்ந்ததும் புவா மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 8) காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இதனையடுத்து, போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளும் குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகளும் விசாரணை, காணொளிகள் மூலமாக புவாவின் அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

அதோடு அவரது கார் பதிவெண்ணும் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு கண்டறிப்பட்டது.

பிப்ரவரி 7ஆம் தேதி பிற்பகல் 3.20 மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது புவா கைதுசெய்யப்பட்டார்.

அவர் ஏன் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்தார் என்ற விவரத்தைக் காவல்துறை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அவரை பிடோக் காவல்துறையின் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு இம்மாதம் 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்