சீனப் புத்தாண்டை ஒட்டி மரினா பே சேண்ட்ஸ், ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு சிங்கப்பூரின் ஆகப் பெரிய காட்சியை விண்ணில் அரங்கேற்றியது.
கடல்நாக சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ‘டிராகன்’ எனப்படும் கடல்நாகக் கருப்பொருளில் அந்தக் கண்கவர் காட்சி அமைந்திருந்தது.
மரினா பே வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் பிப்ரவரி 10ஆம் தேதி இரவு 8 மணிக்கு 1,500 ஆளில்லா வானூர்திகள் ஒத்திசைந்து அந்தக் காட்சியைப் படைத்தன.
மரினா பே வட்டாரத்தின்மேல் பிரம்மாண்ட கடல்நாகம் உலா வந்ததைப்போல் படைக்கப்பட்ட ஒளிக்காட்சியை ஏறக்குறைய 1,000 பேர் கண்டுகளித்தனர்.
பார்வையாளர்கள் சிலர் அந்தக் காட்சியைக் காண்பதற்காக மாலை 6 மணி முதலே மரினா பே வட்டாரத்திற்கு வந்து காத்திருந்ததாகக் கூறினர்.
‘த லெஜண்ட் ஆஃப் த டிராகன் கேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஒளிக்காட்சி, பிப்ரவரி 11, 12, 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் இரவு 8 மணிக்குப் படைக்கப்படும்.