‘எம்பிஎஸ்’ ஆளில்லா வானூர்திக் காட்சி: கூடுதல் கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகள்

1 mins read
0cb9d09f-e3b9-477d-acc4-d51f3457fcce
மரினா பே சேண்ட்ஸ் ஏற்பாடு செய்த ஆளில்லா வானூர்திக் காட்சியை பிப்ரவரி 10ஆம் தேதி சில ஆயிரம் பேர் கண்டு களித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கடல்நாகக் கருப்பொருளில் அமைந்த ஆளில்லா வானூர்திக் காட்சியின் முதல் நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 10) அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் திரண்டதால் மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) நிர்வாகம் கூடுதல் கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கையை அது மேற்கொள்கிறது.

மரினா பே வாட்டர்ஃபிரண்ட் பகுதியின் வான்வெளியில் 1,500 ஆளில்லா வானூர்திகள் ஒத்திசைந்து ‘த லெஜண்ட் ஆஃப் த டிராகன் கேட்’ காட்சியைப் படைக்கின்றன.

இந்த இலவசக்காட்சி, பிப்ரவரி 11, 12, 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் இரவு 8 மணிக்குப் படைக்கப்படும்.

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நாள் காட்சியைக் காணச் சென்ற சிலர் சமூக ஊடகங்களில் கூட்ட நெரிசல் குறித்துப் புகார் கூறியதால், எம்பிஎஸ் அதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ததால் மக்கள் அருகிலிருந்த கடைத்தொகுதிக்குள் முண்டியடித்துச் சென்றனர். சிலர் காட்சியை நன்றாகக் காண்பதற்காக வேறு திசையில் நகர்ந்தனர். இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

அதையடுத்து பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக எம்பிஎஸ் தெரிவித்தது. 10ஆம் தேதி காட்சியைச் சில ஆயிரம் பேர் கண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மரினா பே நீர்முகப்புப் பகுதியின் பல்வேறு இடங்களிலிருந்து பார்வையாளர்கள் ஆளில்லா வானூர்திக் காட்சியைக் காணமுடியும். மேல்விவரங்களுக்கு எம்பிஎஸ் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்