மழையையும் பொருட்படுத்தாது அதிபர் மாளிகையில் திரண்ட 19,500 பேர்

மழையையும் பொருட்படுத்தாது அதிபர் மாளிகையில் திரண்ட 19,500 பேர்

2 mins read
c5a231e1-a3da-4047-afa5-02fd60683136
கடல்நாக நடன நிகழ்ச்சியின்போது, வளம், அதிகாரம், அதிர்ஷ்டம் போன்றவற்றின் சின்னமாகக் கருதப்படும் ‘டிராகன் பேர்ல்’ எனப்படும் கடல்நாகத்தின் வாயில் உள்ள பந்தில் கையெழுத்திட்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 12ஆம் தேதி இஸ்தானாவில் பொது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மழையையும் பொருட்படுத்தாது அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தைக் காண, ஏறக்குறைய 19,500 பேர் திரண்டிருந்தனர்.

இந்த ஆண்டின் முதல் பொது வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள இஸ்தானாவின் முக்கிய நுழைவாயில், பிப்ரவரி 12ஆம் தேதி காலை 8.30 மணிக்குத் திறக்கப்பட்டது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம், நாட்டின் ஆக உயரிய பதவியை ஏற்ற பிறகு இஸ்தானாவில் பொது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுவது இது இரண்டாவது முறை.

உள்ளூர்வாசிகளுடன் சுற்றுப்பயணிகள் பலரும் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட வானிலையைப் பொருட்படுத்தாது, குடையும் கையுமாக, அதிபர் மாளிகையில் அனுமதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுக் கடைகளில் இருந்த உணவு வகைகளையும் சுவைத்துப் பார்த்தனர்.

பொது வரவேற்பு நிகழ்ச்சியின்போது இஸ்தானா திடலுக்குச் செல்ல சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம்.

மற்ற அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் உண்டு. பெரியவர்களுக்கு 20 வெள்ளியும் 4 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு 10 வெள்ளியும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இஸ்தானாவின் முக்கியக் கட்டடத்திற்கு வழிகாட்டியுடன் செல்லும் சுற்றுலாவிற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தேசியப் பூங்காக் கழகத்தின் தொண்டூழியர்கள், ஆர்வமுள்ள வருகையாளர்களுக்கு அதிபர் மாளிகையில் உள்ள மலர்த் தோட்டங்களையும் அவற்றில் வாழும் விலங்கினங்களையும் சுற்றிக்காட்டினர்.

நுழைவுக் கட்டணம், சுற்றுலா ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும் தொகை, அதிபர் சவால் அறநிதிக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் 3.45 மணியளவில் அதிபர் தர்மனும் அவரது மனைவி ஜேன் இத்தோகியும் வருகையாளர்களைச் சந்தித்து அளவளாவினர். பல்வேறு நடன நிகழ்ச்சிகளைக் கண்டு களித்ததுடன் வருகையாளர்களுடன் இருவரும் படமெடுத்துக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்