சாங்கி விமான நிலையத்தில் ஆகப் பெரிய சூரியசக்தித் தகடுக் கட்டமைப்பு

2 mins read
f2c41471-242e-4d7e-bcf6-aab067f1cd0d
பிப்ரவரி 14ஆம் தேதி, சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையக் கட்டடக் கூரையில் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்திய ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடங்களின் கூரைகள், விமானங்கள் புறப்படவும் தரையிறங்கவும் ஒதுக்கப்பட்டுள்ள வான்வெளிக்களம், சரக்குக்கிடங்குகள் ஆகியவற்றில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படுகின்றன.

2025ஆம் ஆண்டு இந்தப் பணி நிறைவடைந்ததும், சிங்கப்பூரில் ஒரே இடத்தில் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள ஆகப் பெரிய சூரியசக்தித் தகடுக் கட்டமைப்பாக அது விளங்கும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் (சிஏஜி) தெரிவித்தது.

விமானங்கள் செயல்படும் இடத்திற்கு அப்பால் நான்கு ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடத்தில் (கிட்டத்தட்ட ஆறு காற்பந்துத் திடல்களுக்குச் சமம்) மேலும் ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்.

இவ்வாறு வான்வெளிக்களத்தில் சூரியசக்தித் தகடுகள் பொருத்துவது குறித்துப் பரிசீலிக்கும்படி 2022ஆம் ஆண்டு அனைத்துலக வல்லுநர் குழு ஒன்று பரிந்துரைத்திருந்தது.

சூரியசக்தித் தகடுக் கட்டமைப்பின் உரிமையாளராக அதனை வடிவமைத்து, உருவாக்கி, 25 ஆண்டுகளுக்கு செயல்படுத்த கெப்பல் நிறுவனம் நியமிக்கப்பட்டிருப்பதாக சிஏஜி கூறியது.

இந்தக் கட்டமைப்பு செயல்படத் தொடங்கியதும் 43 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அதில் 38 மெகாவாட் மின்சாரம் கட்டடக் கூரைகளில் பொருத்தப்பட்ட தகடுகளிலிருந்தும் எஞ்சிய 5 மெகாவாட் மின்சாரம் வான்வெளிக்களத்தில் பொருத்தப்பட்ட தகடுகளிலிருந்தும் உற்பத்தியாகும்.

புதிய கட்டமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், 10,000க்கு மேற்பட்ட நான்கறை வீவக வீடுகளின் ஓராண்டுக்கான தேவையை ஈடுகட்டப் போதுமானதாக இருக்கும் என்று சாங்கி விமான நிலையக் குழுமமும் கெப்பலும் தெரிவித்தன.

இந்தக் கட்டமைப்புகள், குழுமத்தின் கரிம வெளிப்பாட்டை ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 20,000 டன் குறைக்கும் என்று அவை கூறின.

குறிப்புச் சொற்கள்