தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பூமலையில் கூட்டம் நடத்துவதற்கு எதிராகக் காவல்துறை எச்சரிக்கை

1 mins read
dec61c9e-9bc6-4f61-a7e1-673d56cd0c74
வார இறுதியில் சிங்கப்பூர் பூமலையில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான எவ்வித நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்று காவல்துறை, பொதுமக்களை எச்சரித்துள்ளது.

போரில் இரு தரப்புக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தொடர்பில் சிங்கப்பூர் பூமலையில் இவ்வார இறுதியில் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது.

பூமலையில் ‘வெளிநடப்பு செய்வோம் சிங்கப்பூர்’ (வாக்-அவுட் சிங்கப்பூர்) என்று பெயரிடப்பட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. வியாழக்கிழமை (15 பிப்ரவரி) விடுக்கப்பட்ட அந்த அழைப்பைப் பற்றித் தங்களுக்குத் தெரியும் என்று ஊடகத் துறையினர் எழுப்பிய கேள்விகளுக்குக் காவல்துறை பதிலளித்தது.

“அத்தகைய நடவடிக்கைகளுக்குக் காவல்துறையின் அனுமதி தேவை,” என்று காவல்துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. “அனுமதியின்றி பொதுக் கூட்டம் அல்லது பேரணியை நடத்துவதோ அவற்றில் பங்கேற்பதோ பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் குற்றமாகும்,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல்-ஹமாஸ் பூசலையொட்டி பதற்றநிலை அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதன் தொடர்பில் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டால் அது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக இம்மாதம் 13ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதை காவல்துறை மீண்டும் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்