தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிறுவனங்களுக்கு 50% வரை வரி தள்ளுபடி

2 mins read
c3da3b51-e207-4080-b207-4d6b4d9d7783
நிறுவனங்கள், வரி மதிப்பீட்டு ஆண்டு 2024ல் 50 விழுக்காடு, அதிகபட்சமாக $40,000 வரை வருமான வரித் தள்ளுபடியைப் பெறும்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவனங்கள், வரி மதிப்பீட்டு ஆண்டு 2024ல் 50 விழுக்காடு, அதிகபட்சமாக $40,000 வரை வருமான வரித் தள்ளுபடியைப் பெறும்.

அதிகரித்து வரும் தொழில் செலவினத்தை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவும் $1.3 பில்லியன் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதி இது.

2024 வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவன ஆதரவுத் தொகுப்புத் திட்டம் (இஎஸ்பி), ஊழியர்களுக்கு அதிக ஊதியம், அதிகளவிலான வாடகை, பயனீட்டுக் கட்டணங்களைச் செலுத்த சிரமம்படும் வணிகங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிதி அமைச்சருமான, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

அதிகரித்துள்ள செலவுகளைச் சமாளிக்கும் அதேநேரத்தில் மறுசீரமைப்புக்கும் உருமாற்றத்திற்கும் முயற்சி எடுக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவாக இத்திட்டம் உள்ளதாக அவர் கூறினார்.

நிறுவன வருமான வரித் தள்ளுபடி, மேம்படுத்தப்பட்ட தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டம் தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி நீட்டிப்பு ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கும்.

50 விழுக்காட்டு நிறுவன வருமான வரித் தள்ளுபடி அதிகபட்சமாக $40,000 வரை பெறலாம்.

எனினும், ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வோர் ஆண்டும் லாபம் ஈட்டுவதில்லை என்பதால், சிலர் இத்திட்டத்தில் இருந்து விடுபடும் அபாயம் உள்ளது.

எனவே, 2023ல் குறைந்தது ஓர் உள்ளூர் ஊழியரை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் $2,000 ரொக்கமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதிக நிதிச் செலவுகளை எதிர்கொள்ளும் வணிகங்கள் தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தை நாடலாம். இதில் நிரந்தரமாக அதிகபட்ச செயல்பாட்டு மூலதனக் கடன் $500,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட அதிகபட்ச வர்த்தகக் கடன் அளவு $10 மில்லியனாக 2025 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும். 2023 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் முந்தைய நீட்டிப்பு 2024 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

மூன்றாவதாக, தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி (எஸ்எஃப்இசி) 2025 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.

உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் வேலைகளை மறுவடிவமைப்பதன் மூலம் ஊழியரணியை உருமாற்றவும் முயலும் வணிகங்களுக்கு இந்நிதி உதவுகிறது. கையிலிருந்து செலவழிக்கப்படும் தொகையில் 90 விழுக்காடு வரை ஈடுசெய்ய ஒரு முறை வழங்கும் தொகையாக $10,000 வரை கடனளிக்கப்படும்.

“நீட்டிப்பின் மூலம், பயன்படுத்தப்படாத எந்தவொரு கடனையும் முதலாளிகள் கோர இன்னும் ஓராண்டு காலம் இருக்கும்,” என்றார் திரு வோங்.

நிறுவன ஆதரவுத் தொகுப்புத் திட்டம் உடனடி ஆதரவை வழங்கும் என்றாலும், அவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல என்று திரு வோங் குறிப்பிட்டார்.

“நீண்டகால நோக்கில், பணவீக்கத்தைக் கையாள்வதற்கான சிறந்த வழி, நிறுவனங்களும் ஊழியர்களும் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக இருப்பதையும் மேலும் நிகர வருமானம் தொடர்ந்து நிலைத்தன்மையுடன் உயர்ந்து வருவதையும் உறுதி செய்வதாகும்,” என்று நிதியமைச்சர் வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்