தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் கற்பதிலுள்ள சிக்கல்களை நுணுகி நோக்கிய கருத்தரங்கு

2 mins read
53b8fdb4-38fa-4bce-b10f-4c653c7def50
(இடமிருந்து) நெறியாளர் இலக்கியா செல்வராஜி, ஆய்வுகளைப் படைத்த மொழி நிபுணர்கள் டாக்டர் சித்ரா சங்கரன், திரு நாராயணன் வேலாயுதம். - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து தழைக்க உதவும் யோசனைகளைத் தமிழ் ஆர்வலர்கள், சமூகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் சனிக்கிழமை (பிப்ரவரி 17) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைத்தனர்.

‘முன்னோக்கிச் செல்வோம்: சிங்கப்பூரில் தமிழ் மொழியின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் வளர்தமிழ் இயக்கம், இந்தச் சமூகக் கருத்தரங்கை முதன்முறையாக நடத்தியது.

டெசன்சன் ரோட்டிலுள்ள சிவில் சர்விஸ் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் இந்திய, தமிழ்மொழிப் பண்பாடு, கல்வி மற்றும் மாணவ அமைப்புகள் என ஏறத்தாழ 30 அமைப்புகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்.

கல்வித்துறைக்கு அப்பாற்பட்டு பல தளங்களில் செயல்படுவோரை ஒன்றிணைத்து சிந்தனைப் பரிமாற்றத்தில் ஈடுபடச் செய்வது கருத்தரங்கின் நோக்கம் என்றார் அந்நிகழ்ச்சியில் தொடக்க உரை ஆற்றிய வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம். “புகழ்ச்சியை விடுத்து தமிழ்மொழியின் இன்றைய நிலை என்ன என்பதை ஆராய்ந்து, அடுத்த நடவடிக்கையைப் பற்றிய சிந்தனையை சிரமேற்கொண்டு செயல்பட வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் மூத்த ஊடகவியலாளர் நாராயணன் வேலாயுதமும் டாக்டர் சித்ரா சங்கரனும் தங்கள் ஆய்வுகளைப் பகிர்ந்தனர். இளையர்களின் சமூக ஊடகப் போக்குகள், சமூக ஊடகங்களில் மாறிவரும் தமிழ்மொழியின் தன்மை, சமூக ஊடகங்களுக்கும் தமிழ்மொழிக்கும் இடையிலான சிக்கலான உறவுமுறை உள்ளிட்டவற்றை நாராயணன் எடுத்துக்கூறினார்.

‘டைக்லாசியா’ (diglossia) எனப்படும் இரட்டைமாெழி நிலையைக் கொண்டுள்ள உலகின் வெகு சில மொழிகளில் தமிழும் ஒன்று எனக் குறிப்பிட்ட டாக்டர் சித்ரா, தமிழைத் தவிர கிரேக்கம் போன்ற ஒருசில பண்டை மொழிகளில் மட்டும் காணப்படும் இத்தன்மை, முழுமையாகத் தமிழ் பேசப்படாத சமுதாயங்களில் தமிழைப் புதிதாகக் கற்பவருக்குச் சவாலை ஏற்படுத்துகிறது என்ற உண்மை நிலையை விளக்கினார்.

நிகழ்ச்சியைச் சிறப்பித்த வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆலோ­ச­கர் குழு­வின் தலை­வ­ரும் செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு விக்ரம் நாயர், கற்றல் பயணம் கரடு முரடாக இருக்கக்கூடும் என்பதால் கற்க முன்வரும் இளையர்களுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் பார்வையாளர் பகுதியிலிருந்து பகிரப்பட்ட கருத்துகளும் பேச்சாளர்களின் கருத்துகளுக்கு சளைத்தவை அல்ல. தமிழ் முழுமையாக பேசப்படும் சூழலை ஏற்படுத்த டாக்டர் சித்ரா முன்வைத்த யோசனையைச் செயல்படுத்த தேக்கா வட்டாரத்தில் கேளிக்கைகள் நிறைந்த தமிழ்மொழிச் சந்தை ஒன்று அமைக்கலாம் என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான ராஃபிள்ஸ் கல்வி நிலைய ஆசிரியர் எஸ். ஜெகதீசன் முன்மொழிந்தார்.

தமிழ் நன்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்களை ஆணவத்துடன் நோக்காமல் அன்புடன் பண்புகளைப் புகட்டினால் தமிழை வளர்க்கும் பணி எளிதாகும் என்ற, மீடியாகார்ப் ஒலி 968 வானொலிப் படைப்பாளர் அப்துல் காதரின் கருத்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்