ஆகாயத் துறை 3-5 ஆண்டுகளில் 2,500 பேரை வேலைக்கு அமர்த்தும்

2 mins read
d103693c-581c-4d05-bec8-449c1cb925b7
இங்கு ஆகாயத் துறை நிறுவனங்களின் பணியமர்த்தல் கடந்த ஈராண்டுகளாக அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆகாயத் துறை அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 2,500க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடத்துனர்கள், தொழில்நுட்பர், பொறியியலாளர், நிறுவனப் பதவிகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்க்கப்படும் என்று பிப்ரவரி 18ஆம் தேதி பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

2024 சிங்கப்பூர் ஆகாயக் காட்சிக்கு முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக துணைத் தலைவர் சிண்டி கோ, புதிய முதலீடுகளைப் பெற, கடந்த 2022 ஆகாயக் காட்சியிலிருந்து ஆகாயத் துறை நிறுவனங்களுடன் கழகம் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

அது முதல் 10க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களுக்கு அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் $750 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டுக் கடப்பாட்டைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் 130க்கும் மேற்பட்ட விண்வெளி நிறுவனங்கள் உள்ளன என்றும், 10 ஆகாயத் துறை வேலைகளில் ஏழு வேலைகளை உள்ளூர்வாசிகள் பெறுகின்றனர் என்றும் திருவாட்டி கோ கூறினார்.

கடந்த ஈராண்டுகளில், இங்குள்ள ஆகாயத் துறை நிறுவனங்களால் பணியமர்த்தல் அதிகரிக்கப்பட்டது. இந்தத் துறையில் மொத்த வேலைவாய்ப்பு 2021 முதல் 2023 வரை கிட்டத்தட்ட 3,000 வேலைகள் அதிகரித்து 21,000க்கும் அதிகமாயின.

2019ல் சிங்கப்பூரிலுள்ள ஆகாயத் துறையில் கிட்டத்தட்ட 22,000 பேர் பணிபுரிந்தனர். ஆனால் கொவிட்-19 கொள்ளைநோய் பயணத் துறையைப் பாதித்ததால், பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

2023ல், சிங்கப்பூர் ஆகாயத் துறையின் உற்பத்தி ஆண்டுக்கு 16% வளர்ச்சியை எட்டியது. சிங்கப்பூர் ஆகாயத் துறையின் உற்பத்தி 2023ல் $15 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்