வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் சுத்தமான உணவு

2 mins read
1de12a92-b701-42db-9f2b-1d65869c98dc
கொஹ்ரேன் லாட்ஜ் 1 தங்குவிடுதியில் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்படும் உணவு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது சுத்தமான உணவு கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறுகளைத் திருத்திக்கொள்ளுமாறு மனிதவள அமைச்சு, சரியாகச் செயல்படாத தங்குவிடுதிகளுக்கு உத்தரவிட்ட பிறகு இது சாத்தியமாகியிருக்கிறது. தங்குவிடுதி அறைகளுக்கு வெளியே வெளிநாட்டு ஊழியர்களுக்கான உணவு கவனிப்பின்றி விட்டுச் செல்லப்பட்டு வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் சிறப்புச் செய்தி தெரிவித்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உணவு விநியோக நிறுவனங்கள், முன்பு தங்குவிடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கான உணவுப் பொட்டலங்கள் அறைகளுக்கு வெளியே விட்டுச் செல்லப்பட்டன. சில வேளைகளில் உணவுப் பொட்டலங்கள் திடலிலேயே விட்டுச் செல்லப்பட்டன.

அதன் காரணமாக வேலை முடிந்து ஊழியர்கள் தங்குவிடுதிகளுக்குத் திரும்பி வரும்போது உணவு கெட்டுப்போயிருந்தது.

எனினும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதாக நான்கு தங்குவிடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். ஊழியர்களுக்கான உணவை சரியாக கவனிக்காத 10 தங்குவிடுதிகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னதாக அடையாளம் கண்டது. அவற்றில் இந்த நான்கு தங்குவிடுதிகளும் அடங்கும்.

சினோக்கோ வே, கிராஞ்சி ரோடு, அட்மிரல்டி ரோடு வெஸ்ட் ஆகிய பகுதிகளில் அந்த நான்கு தங்குவிடுதிகள் உள்ளன. முன்பெல்லாம் அவற்றில் உள்ள நடைபாதைகளிலும் வெளியே உள்ள திடல்களிலும் உணவுப் பொட்டலங்கள் காணப்பட்டன. இப்போது நிலைமை மாறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அட்மிரல்டியில் உள்ள கொஹ்ரேன் லாட்ஜ் 1 தங்குவிடுதிக்கு வெளியே உணவு விநியோக நிறுவனங்கள் உலோக அறைகலன்களில் உணவை விட்டுச் செல்கின்றன. உரிமம் உள்ள உணவு விநியோக நிறுவனங்கள் மட்டும் அங்கே உணவை விட்டுச்செல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் குறிப்பு அங்கு காணப்படுகிறது.

அட்மிரல்டியில் உள்ள மற்றொரு தங்குவிடுதியான கொஹ்ரேன் லாட்ஜ் 2, சினோக்கோ வேயில் உள்ள போ வா தங்குவிடுதி, கிராஞ்சி லாட்ஜ் 1 தங்குவிடுதி ஆகியவற்றிலும் வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உணவை விட்டுச்செல்லலாம்.

“முன்னதாக தங்குவிடுதிகளுக்கு வெளியே உள்ள திடலில் வைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை எடுக்கப் போகும்போது மழை, பாம்புகள், எலிகள் ஆகியவற்றை எதிர்கொண்டோம்,” என்றார் தமிழகத்திலிருந்து வந்த 41 வயது கருப்பையா என்ற வெளிநாட்டு ஊழியர்.

“இப்போது தங்குவிடுதி வளாகத்திலேயே பாதுகாப்பான முறையில் உணவைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. மனிதவள அமைச்சுக்கு நன்றி,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொஹ்ரேன் லாட்ஜ் 2 தங்குவிடுதியில் வசிக்கும் 20களில் இருக்கும் அழகப்பன் சுதாகரன் எனும் வெளிநாட்டு ஊழியர், “உணவின் மீது சூரிய ஒளியோ மழையோ இப்போது நேரடியாகப் படுவதில்லை. அதனால் உணவு சீக்கிரம் கெட்டுப்போவதில்லை,” என்று கூறினார். இவர் ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்