உந்து நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் அதிகரிப்பு

உந்து நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
3aa6ad7b-6b47-4ea0-bb3b-9b0a29ee9de8
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் வருடாந்திர புள்ளிவிரங்களை உபியில் உள்ள அதன் தலைமையகத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உந்து நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டில் அதிகரித்தன.

மூன்று ஆண்டுகள் கழித்து இத்தகைய தீச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், மின் சைக்கிள், தனிநபர் நடமாட்டத் துணைக் கருவிகள் ஆகியவை தொடர்பான தீச்சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் 31 விழுக்காடு ஏற்றம் கண்டது.

2023ஆம் ஆண்டில் இந்தச் சாதனங்கள் தொடர்பாக 55 தீச்சம்பவங்கள் பதிவாயின.

2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 42ஆக இருந்தது.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஈசூன் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, 17 வயது சிறுவன் மாண்டான்.

2019ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை உந்து நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்கள் குறைந்து வந்தன.

ஆனால் 2023ஆம் ஆண்டில் அந்த சாதனங்களால் ஏற்பட்ட தீச்சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

இத்தகைய தீச்சம்பவங்கள் அக்கறைக்குரியவை என்று பிப்ரவரி 21ஆம் தேதி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உந்து நடமாட்டச் சாதனங்களைக் கையாளும்போது தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவை தொடர்பான தீச்சம்பவங்கள் படுகாயங்களையும் பெரும் சேதத்தையும் விளைவிக்கக்கூடியவை,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும் இத்தகைய தீச்சம்பவங்கள் தொடர்வதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செயலாக்கப் பிரிவு இயக்குநரான உதவி ஆணையர் மைக்கல் சுவா தெரிவித்தார்.

“விநியோகப் பணிக்காகப் பலர் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். சாதனங்களின் மின்கலன்கள் கூடுதல் காலம் நீடிக்க வேண்டும் என்ற நோக்குடன் அவற்றில் சில அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை அவர்களில் பலர் செய்து வருகின்றனர். இதனால் தீச்சம்பவங்கள் நிகழ்கின்றன,” என்று உதவி ஆணையர் சுவா கூறினார்.

2022ஆம் ஆண்டில் 1,799 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8.6 விழுக்காடு அதிகரித்து 1,954ஆகப் பதிவானது.

மின்சாரம் தொடர்பான தீச்சம்பவங்கள், சமையலைக் கவனிக்காமல் வீட்டுச் செல்வதால் ஏற்படும் தீச்சம்பவங்கள் ஆகியவை சிங்கப்பூரில் நிகழும் தீச்சம்பவங்களுக்கான முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

உந்து நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்களில் பெரும்பாலானவை வீடுகளில் நிகழ்ந்தன.

குறிப்புச் சொற்கள்