விரிவலைக் கட்டமைப்பை மேம்படுத்த $100 மில்லியன் வரை முதலீடு

2 mins read
2f230118-cd65-4693-bd80-f52dd538bb1b
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடுகளுக்கு வழங்கப்படும் இணையச்சேவையின் வேகம் தற்போது இருப்பதைவிட 10 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது. 

அதை நிறைவேற்றும் வகையில், சிங்கப்பூரின் விரிவலைக் கட்டமைப்பை மேம்படுத்த $100 மில்லியன் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ புதன்கிழமை தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்த தற்போது இருப்பதைவிட அதிவேகம் கொண்ட இணையச் சேவை தேவை என்பதால் தேசிய விரிவலைக் கட்டமைப்பு மேம்படுத்தப்படவுள்ளதாக திருவாட்டி டியோ மேலும் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டுக்குள் அடித்தளக் கட்டமைப்பையும் பயனர் சாதனங்களையும் மேம்படுத்த தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் முதலீடு செய்யும் $100 மில்லியன் பயன்படுத்தப்படும்.

இதன்மூலம், வீடு­க­ளுக்கு விரி­வலை இணைப்­புச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் நொடிக்கு 10 கிகா­பைட் வேகத்தில் இணைய இணைப்பை வழங்க முடியும்.

“நொடிக்கு 10 கிகா­பைட் வேகம் வரை வரும் இணையச் சேவையின் பயன்பாடு குறித்துத் தற்போது தெரியவில்லை.

“ஆனால், தகவல்தொடர்புத் துறை அதிவேகத்தில் வளர்ந்து வருவதால் அந்த இணைய வேகத்தில் இயங்கும் தொழில்நுட்பம் வரும்போது சிங்கப்பூரின் விரிவலைக் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு மேம்பட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம்,” என திருவாட்டி டியோ எடுத்துரைத்தார்.

“மின்னிலக்க உள்கட்டமைப்பு கட்டமைக்க நேரம் எடுக்கும். ஒரே இரவில் அதைச் செய்ய இயலாது.

“நமது பணி செய்யும் முறையையும் வாழ்க்கை முறையையும் மின்னிலக்க மேம்பாடுகள் எப்படி மாற்றும் என்பதை நம்மால் முன்கூட்டியே அறிய இயலாது,” என்றார் திருவாட்டி டியோ.

குறிப்புச் சொற்கள்