புதிய பட்டதாரிகளுக்கு 2023ல் அதிக ஊதியம்: ஆய்வு

2 mins read
df14a381-53e0-43d4-96fc-62a1c22423d1
புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அண்மைய ஆய்வில் அவர்களின் இடைநிலை மொத்த சம்பளம் $4,313ஆக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய பட்டாதரிகள் சென்ற ஆண்டு (2023), அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளைவிட அதிக ஊதியம் பெற்றதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துவரும் நிலையில் அவர்களில் சிலரே முழுநேர, பகுதிநேர வேலைகள், தன்னார்வ அடிப்படையிலான வேலைகள் போன்றவற்றில் சேர்ந்தனர்.

சென்ற ஆண்டு, புதிய பட்டதாரிகளின் இடைநிலை மொத்த சம்பளம் $4,313ஆக உயர்ந்தது. 2022ல் அது $4,200ஆக இருந்தது.

பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான ஆக அண்மைய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு ஆய்வில் அது தெரியவந்தது.

இருப்பினும், புதிய பட்டதாரிகளில் 84.1 விழுக்காட்டினரே முழுநேர நிரந்தர வேலைகளைப் பெற்றனர். ஒப்புநோக்க, 2022ல் அந்த விகிதம் 87.5 விழுக்காடாக இருந்தது.

சென்ற ஆண்டு பகுதிநேர வேலைகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டைவிட அரை விழுக்காடு குறைந்து நான்கு விழுக்காடாகப் பதிவானது.

2023ல் தன்னார்வ அடிப்படையிலான வேலைகளில் 1.5 விழுக்காட்டினரே சேர்ந்தனர். 2022ல் அந்த விகிதம் 1.8 விழுக்காடு.

ஆய்வில் பங்குபெற்ற வேலையிலுள்ள அல்லது வேலைதேடும் புதிய பட்டதாரிகள் 10,900 பேரில் 89.6 விழுக்காட்டினர், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் வேலை கிடைத்ததாகக் கூறினர்.

2022ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 93.8 விழுக்காடாக இருந்தது.

கொவிட்-19 கிருமிப் பரவலுக்குமுன், 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, சராசரியாக 89.9 விழுக்காட்டுப் புதிய பட்டதாரிகள் வேலையில் சேர்ந்தனர்.

அவர்களில் 80.4 விழுக்காட்டினர் முழுநேர நிரந்தர வேலைகளில் சேர்ந்தனர்.

சென்ற ஆண்டு, சுகாதார அறிவியல், தகவல் மற்றும் மின்னிலக்கத் தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் முழுநேர நிரந்தர வேலைகளில் சேர்ந்தனர். அவர்களின் விகிதம் முறையே 95.9%, 88.7% மற்றும் 88.3% ஆக இருந்தது.

2023ல், தகவல் மற்றும் மின்னிலக்கத் தொழில்நுட்பப் பட்டதாரிகள் $5,500 நிகர சம்பளம் பெற்றனர். 2022ல் அந்தத் தொகை $5,625ஆக இருந்தது.

பொறியியல் பட்டதாரிகளின் இடைநிலை மொத்த மாதச் சம்பளம் $4,500 ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டைவிட இது $100 குறைவு.

மற்ற துறைகளில் பயின்ற பட்டதாரிகளுக்கு சென்ற ஆண்டு இடைநிலை மொத்த மாதச் சம்பளம் 2022ஆம் ஆண்டைவிட அதிகரித்தது.

என்யுஎஸ், என்டியு, எஸ்எம்யு, எஸ்யுஎஸ்எஸ் ஆகிய பல்கலைக்கழகங்களில் முழுநேரக் கல்வி பயின்ற ஏறத்தாழ 12,300 மாணவர்களிடம் கடந்த நவம்பரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்