கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களில் வேகமாகச் செல்லும் வாகனமோட்டிகள்

2 mins read
fc7efa0b-050b-4ce3-b646-d065081a9e3c
தீவு விரைவுச்சாலையில் பிப்ரவரி 22ஆம் தேதி, லேசர் கேமராவைப் பயன்படுத்திக் கண்காணிக்கும் போக்குவரத்துக் காவலர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத இடங்களில் வாகனமோட்டிகள் வேகமாகச் செல்வதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாகக் கூறிய போக்குவரத்துக் காவல் பிரிவு, இந்தப் போக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

“ஒவ்வொரு விதிமீறலும் மிகக் கடுமையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் விதிமீறல்கள் உயிரைப் பறிக்க வல்லவை,” என்று பிப்ரவரி 23ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் அது குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு (2023), சாலை விபத்துகளில் 136 பேர் மாண்டனர். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 25.9 விழுக்காடு அதிகம். பிப்ரவரி 20ஆம் தேதி வெளியான போக்குவரத்துக் காவல் பிரிவின் வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்காக குறைவான வாகனமோட்டிகளே கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பிடிபட்டனர். 2023ல் 52,237ஆகப் பதிவான இத்தகையோர் எண்ணிக்கை 2022ல் 73,152ஆக இருந்தது.

இருப்பினும், காவல்துறையின் இதர அமலாக்க நடவடிக்கைகளில் வேகமாக வாகனமோட்டியதற்காகப் பிடிபட்டோர் எண்ணிக்கை சென்ற ஆண்டு 22 விழுக்காடு அதிகரித்து 63,468ஆகப் பதிவானது.

போக்குவரத்துக் காவல் பிரிவு ஆறு வகையான அமலாக்க கேமராக்களைப் பயன்படுத்துகிறது.

முதல் வகை, போக்குவரத்து விளக்கில் சிவப்புச் சமிக்ஞையைப் பொருட்படுத்தாது வாகனத்தைச் செலுத்துவோரைப் பிடிக்க உதவும் கேமராக்கள். இனி வேகமாக வாகனமோட்டுவோரைப் பிடிக்கவும் இவை பயன்படுத்தப்படும்.

இரண்டாவது, சராசரி வேகத்தைக் கணக்கிடும் கேமராக்கள்.

மூன்றாவது வகை, வெகு தொலைவிலேயே வேகமாக செலுத்தப்படும் வாகனத்தை அடையாளம் காணும் கேமரா.

நான்காவது நடமாடும் வேகக் கண்காணிப்பு கேமரா. வேகமாக ஓட்டப்படும் வாகனங்களின் படங்களை இது போக்குவரத்துக் காவல் பிரிவுக்கு அனுப்பும்.

ஐந்தாவது வகை, காவல்துறையின் லேசர் வேகக் கண்காணிப்பு கேமரா. இரவுநேரத்திலும் சிறப்பாகச் செயலாற்றக்கூடிய கேமரா இது.

ஆறாவது, சுற்றுக்காவல் பணிக்கான கார்களில் பொருத்தக்கூடிய கேமரா. இது வேகமாக ஓட்டப்படும் வாகனங்களை காணொளியாகப் பதிவுசெய்யக் கூடியது.

வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று போக்குவரத்துக் காவல் பிரிவு எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்