சைனா டவுனில் இருக்கும் பணப் பரிமாற்றம் செய்யும் நிறுவனமான ‘சம்லிட் மனிசேஞ்சர்’ நிறுவனத்தின் இயக்குநரையும் இணக்க மேலாளரையும் மோசடி நிறுவனம் நடத்திய சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருவதாக சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் கூறியது.
உரிமம் பெற்ற பணப்பரிமாற்ற சேவைகளுக்கான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதாகவும் அவர்களிடம் வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 23ஆம் தேதி) சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருவதாக அவை குறிப்பிட்டன.
சம்லிட் நிறுவனத்தின் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்ட பணத்தைச் சீன அதிகாரிகள் முடக்கியதால் அந்தப் பணத்தைப் பெறவேண்டியவர்களால் அதை பெற முடியவில்லை என அந்நிறுவனத்தின்மீது புகார்கள் எழுந்தன.
அதனால் அந்நிறுவனத்தை ஆய்வு செய்ததாகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது.
சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் சங்கத்திடம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 14 வரை முடக்கப்பட்ட அல்லது பறிமுதல் செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக 39 புகார்கள் வந்தன. அதில் 27 புகார்கள் சாம்லிட் நிறுவனம் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

