மருத்துவர் ஆலோசனையின்றி மருந்தகத்தின் இணையப் பக்கத்தில் மருத்துவச் சான்றிதழ்களை வழங்கியதற்காக ‘மெட்ஸ்டார் மெடிக்கல் கிளினிக் அண்ட் சர்ஜரி’ மருந்தகத்திடம் சுகாதார அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
அந்த மருந்தகத்தின் தொலைமருத்துவச் சேவையான ‘பாக்கெட்கேர்’, காணொளி வழியாக மருத்துவர் ஆலோசனையின்றி $5.99க்கு ஐந்தே நிமிடங்களில் நோயாளிகள் மருத்துவச் சான்றிதழ் பெறலாம் என்று இன்ஸ்டகிராமிலும் அதன் இணையப் பக்கத்திலும் விளம்பரப்படுத்தியது குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
சிராங்கூன் சாலையில் உள்ள அந்த மருந்தகம், வினாப் பட்டியலை நிறைவு செய்த பிறகு மருத்துவச் சான்றிதழ்களை வழங்கியதாக அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அந்த மருந்தகத்தின் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரை சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் விசாரணைக்காக சுகாதார அமைச்சு ஒப்படைத்தது.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல், மருத்துவர் சரிபார்ப்பின்றி நோயாளிகள் போலியான அல்லது தவறான பதில்களை அனுப்பி, முறையான மருத்துவ மதிப்பீடின்றி மருத்துவச் சான்றிதழ் பெறக்கூடும் என்று அமைச்சு கூறியது.
வெளிநோயாளி மருத்துவச் சேவைகளை வழங்க மெட்ஸ்டார் தற்சமயம் உரிமம் பெற்றுள்ளது.

