தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் விமானக் காட்சி: ஏறத்தாழ 60,000 வர்த்தக வருகையாளர்கள்

2 mins read
6f768ec6-aa4d-41e4-b9e3-8b60da47e6e1
பிப்ரவரி 21ஆம் தேதி விமானக் காட்சியைக் கண்டு ரசித்த பார்வையாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் விமானக் காட்சியின் முதல் நான்கு நாள்களில் கிட்டத்தட்ட 60,000 வர்த்தக வருகையாளர்கள் வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2018ஆம் ஆண்டு பதிவான வருகையாளர்கள் எண்ணிக்கையைவிட இது 10 விழுக்காடு அதிகம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

விமானத் துறை முன்னேற்றத்திற்கான தெளிவான அறிகுறியாக இது கருதப்படுகிறது.

பிப்ரவரி 23ஆம் தேதியுடன் சிங்கப்பூர் விமானக் காட்சியின் வர்த்தகர்களுக்கான நான்கு நாள் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

கொவிட்-19 கிருமிப் பரவலால் 2020, 2022ஆம் ஆண்டுகளில் இந்த விமானக் காட்சி இடையூறுகளைச் சந்தித்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை முழுமையான விமானக் காட்சி இடம்பெறுகிறது.

இவ்வாண்டின் விமானக் காட்சியில் வருகையாளர்கள், கண்காட்சியில் படைப்புகளைக் கடைவிரித்தோர் என இருதரப்பினருமே சுறுசுறுப்பாக இருந்ததைக் காணமுடிந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

முதல்முறையாக அனைத்துலக அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீனாவின் உள்நாட்டுத் தயாரிப்பான கொமேக் சி919 ரக குறுகலான பயணியர் ஜெட் விமானம் பலரது கவனத்தை ஈர்த்தது. திபெத் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த ரகத்தைச் சேர்ந்த 50 விமானங்களை வாங்க முன்வந்துள்ளது.

அமெரிக்காவின் போயிங், ஐரோப்பாவின் ஏர்பஸ் ஆகியவற்றின் மொத்தம் 77 விமானங்களை தாய் ஏர்வேஸ், வியட்ஜெட், தைவானின் ஸ்டார்லக்ஸ் போன்றவை வாங்கவிருக்கின்றன.

சிங்கப்பூர் விமானக் காட்சி 2024ல் நீடித்த நிலைத்தன்மை அம்சம் முக்கியத்துவம் பெற்றது.

இந்த விமானக் காட்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக, சிங்கப்பூரிலிருந்து கிளம்பும் விமானங்களில் பயணம் செய்வோர் 2026ஆம் ஆண்டிலிருந்து பசுமை எரிபொருள் தீர்வையைச் செலுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்தது. இதுகுறித்து விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் ‘ஏர் டாக்சி’ எனப்படும் சிறிய ரக பறக்கும் டாக்சிகளுக்கான தொழில்நுட்பப் பயன்பாட்டை இவ்வட்டாரத்தில் மேம்படுத்துவதன் தொடர்பில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

குறிப்புச் சொற்கள்