தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிக நோயாளிகளால் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி; ஆம்புலன்ஸ் சேவைக்கும் பாதிப்பு

2 mins read
77aa9add-254b-4762-93bd-29b59957af5e
பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் சாங்கி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நோயாளிகளை தள்ளுப் படுக்கைகளில் படுக்க வைத்து உள்ளே கொண்டு சென்ற சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

மருத்துவமனைகள் சமாளிக்கக்கூடிய அளவுக்கும் மேலாக அவற்றின் அவசரகால சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளிகள் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுளளது.

இதனால் ஆம்புலன்ஸ் சேவைக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 25ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தனது அவசர ஆம்புலன்ஸ் சேவைக்காக நாளுக்குக் கிட்டத்தட்ட 700 அழைப்புகள் கிடைத்ததாக தி சன்டே டைம்ஸ் நாளிதழிடம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

2023ஆம் ஆண்டில் நாளுக்குச் சராசரியாக 676 அழைப்புகள் கிடைத்ததாக அது கூறியது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்பு நாளுக்கு ஏறத்தாழ 750ஆக அதிகரித்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிக நோயாளிகள் இருந்ததால் நோயாளிகளை மருத்துவமனைகளிடம் ஒப்படைப்பதில் ஆம்புலன்ஃஸ்களுக்குத் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் அவசர அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பல ஆம்புலன்சுகள் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவிடம் நோயாளிகளை ஒப்படைக்கக் காத்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த அழைப்புகளுக்குச் சேவை வழங்க குறைவான ஆம்புலன்சுகள் எஞ்சி இருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இது அக்கறைக்குரிய விவகாரம் என்று அது தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு மொத்தம் 92 ஆம்புலன்சுகள் உள்ளன.

இதற்கிடையே, மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஆம்புலன்ஸ் மூலமாகவோ அல்லது சொந்தமாகச் செல்பவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினருக்கு அங்குள்ள சிகிச்சை தேவையில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.

அதற்குப் பதிலாக அவர்கள் தனியார் மருத்துவருக்குச் செல்ல வேண்டும் என்று அது தெரிவித்தது.

தேவையில்லாமல் 995 எனும் அவசர மருத்துவ சேவை எண்ணை அழைக்க வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் 2023ஆம் ஆண்டில் அத்தகைய 10,000க்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது நாளுக்கு 30 அழைப்புகளுக்குச் சமம்.

தற்போதைய நிலவரப்படி, அவசர மருத்துவச் சேவை தேவைப்படாத ஏறத்தாழ 50 அழைப்புகள் தினந்தோறும் கிடைப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இந்நிலையில், சாங்கி பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துமனை ஆகியவற்றின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஆக அதிகமான நோளாளிகள் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சாங்கி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று சாங்கி பொது மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்