மலேசியத் தூதரகம் இனி நாளுக்கு 70 பேருக்கு மட்டுமே தூதரகச் சேவைகளை வழங்கும்

மலேசியத் தூதரகம் இனி நாளுக்கு 70 பேருக்கு மட்டுமே தூதரகச் சேவைகளை வழங்கும்

2 mins read
84095bf6-e34b-4df4-ab18-cb285832229b
சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம். - படம்: கூகல் மேப்ஸ்

சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் இனி நாளுக்கு 70 பேருக்கு மட்டுமே தூதரகச் சேவைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றம் பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.

குழந்தைப் பிறப்பு பதிவு, திருமணப் பதிவு, மரணப் பதிவு, ஆவணங்கள் சான்றளிப்பு முதலிய சேவைகளை இந்த மாற்றம் பாதிக்கும்.

தூதரகச் சேவைகளை நாடுவோர் காலை 8 மணியிலிருந்து வரிசை எண்ணை தூதரக வாசலில் உள்ள பாதுகாவலரகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால், நாளுக்கு 70 பேருக்கு மட்டுமே வரிசை எண் தரப்படும் என்று பிப்ரவரி 26ஆம் தேதியன்று மலேசியகத் தூதரகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்திலும் இணையப்பக்கத்திலும் பதிவிட்டது.

இந்தத் திடீர் மாற்றம் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று சில மலேசியர்கள் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

இணையம் மூலம் முன்பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வியை சில மலேசியர்கள் எழுப்பியுள்ளனர்.

“இந்தத் திடீர் மாற்றம் நடப்புக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு இதுகுறித்து மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. தூதரகச் சேவைகளைப் பெற நான் நேற்று தூதரகத்துக்குச் சென்றேன். ஆனால், எனக்குத் தேவைப்பட்டதை முழுமையாகப் பெற முடியாமல் போனது. எனவே, இன்றும் வந்துள்ளேன். திடீரென்று இந்தப் புதிய அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று வரிசை கிடைக்காமல் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்ட ஒருவர் மலேசியத் தூதரகத்தின் இணையப்பக்கத்தில் பிப்ரவரி 27ஆம் தேதியன்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தூதரகச் சேவைகளைப் பெற மறுநாள் சென்றதாகவும் அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு வரிசை எண் 49 கிடைத்ததாகவும் அவர் சொன்னார்.

2022ஆம் ஆண்டு நிலவரப்படி சிங்கப்பூரில் ஏறத்தாழ 1.13 மில்லியன் மலேசியர்கள் வசிக்கின்றனர். இந்தத் தகவலை 2023ஆம் ஆண்டில் அப்போதைய மலேசிய மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்